காடுகளில் ஆயுதமேந்திப் போராடிய மாவோயிஸ்டுகளை, பத்தாண்டுகளுக்கு முன்பு வேட்டையாடிய காங்கிரசு ஆட்சியில் இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். “ஆயுத நக்சல்களை ஒழித்துவிட்டோம்; இனி ‘திமாகி நக்சல்களை’ அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்” என்கிறார் மோடி. அதாவது காடுகளிலிருந்து இப்போது சிந்தனைக்குள் தனது வேட்டையை விரிவுபடுத்த வேண்டுமென சிக்னல் கொடுக்கிறார் மோடி. இந்தப் பாசிச அச்சுறுத்தலை எதிர்த்து மக்களைத் திரட்டவோ, வீதியில் இறங்கவோ முன்வராத சிதம்பரம், எக்ஸ் தளத்தில் ஒரே வரியில் “நானும் திமாகி நக்சல்தான்; அதில் பெருமைப்படுகிறேன்” என்று அறிவித்துக்கொண்டு வேடத்தை மாற்றியிருக்கிறார்.
இது வெறும் மோடி–சிதம்பரம் வாய்ச்சண்டை அல்ல; நாட்டில் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் அரசியல் சூழலின் வெளிப்பாடு. மோடி அரசு மீதான அச்சத்தை இளைய தலைமுறை உடைத்துக் கொண்டிருக்கிறது. தேர்வுத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை, கல்விக் கட்டமைப்பின் சீரழிவு ஆகியவற்றுக்கு எதிரான இளைஞர் எழுச்சி டெல்லியிலிருந்து பல பகுதிகளுக்குப் பரவி, அரிதாகவே மக்கள் அழுத்தத்துக்குப் பணியும் மோடி அரசை கல்வி அமைச்சரைப் பதவி விலகச் செய்யும் நிலைக்குத் தள்ளியது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP) தலைமையிலான இந்த இயக்கம், தேர்தல் கட்சிகளின் பின்னால் அணிவகுப்பதற்குப் பதிலாக ஆட்சியையும் அரசு நிறுவனங்களையும் நேரடியாகப் பொறுப்பேற்கச் செய்யும் மக்கள் இயக்கத்தை முன்னிறுத்திச் செயல்படத் தொடங்கியுள்ளது.
அந்தப் புதிய அரசியல் சூழலில் தங்களுக்கும் ஓர் இடம் பிடிக்க ஆளும் வர்க்கத்தின் பழைய அரசியல் பிரதிநிதிகள் துடிக்கிறார்கள். சிதம்பரத்தின் “திமாகி நக்சல்” வேடத்தையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
காடுகளில் வேட்டை முடிந்ததாம்;
இனி மூளைக்குள் வேட்டை!
மோடியின் ‘சுதந்திர’ தினப் பேச்சில் மிகவும் அபாயகரமான சொல் “நக்சல்” அல்ல; “அடையாளம் கண்டு தனிமைப்படுத்துங்கள்” என்பதுதான். ஆயுதம் ஏந்திய ஒருவரை அரசின் எதிரி என்று வகைப்படுத்துவதிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அரசியல் சிந்தனையைக் கொண்டிருப்பவரையே சமூகத்திற்கு ஆபத்தானவர் என்று முத்திரை குத்தும் இடத்துக்கு அரசின் வரையறை நகர்கிறது.
“நகர்ப்புற நக்சல்” (Urban Naxal) என்று அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசை விமர்சிப்பவர்கள் மீது ஏற்கெனவே குத்தப்பட்ட முத்திரைக்கு, இப்போது “திமாகி நக்சல்” (Dimagi Naxal) என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமது ஆட்சியின் மீதான விமர்சனங்களை அரசியல் பிரச்சினையாக எதிர்கொள்ளாமல், பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாற்றுவதுதான் இதன் சாரம். எந்தச் சிந்தனை அனுமதிக்கப்படும், எது சமூகத்துக்கு ஆபத்தானது என்பதை ஆட்சியாளனே தீர்மானித்து, அந்தச் சிந்தனையாளர்களைத் தனிமைப்படுத்துமாறு மக்களையே அழைப்பது சாதாரண ஜனநாயகச் சீரழிவல்ல; பாசிசமயத்தின் அபாயகரமான வளர்ச்சி.
இதற்குச் சில வாரங்களுக்கு முன்பே, ஜூலை 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், நாட்டில் இனி “இடதுசாரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம்” என்று வகைப்படுத்தப்பட்ட மாவட்டம் ஒன்றுகூட இல்லை என்று அறிவித்தது. ஆகஸ்ட் 1-இல் இதையே “நக்சல் இல்லாத இந்தியா” என்ற வெற்றிப் பிரச்சாரமாக மாற்றியது மோடி அரசு. காடுகளில் இருந்த ஆயுத எதிரியைத் தோற்கடித்துவிட்டோம் என்று வெற்றிச்சங்கு ஊதிய கையோடு, சிந்தனைக்குள் புதிய ‘உள்நாட்டு எதிரி’யை உருவாக்குகிறது. காட்டு வேட்டையிலிருந்து மூளை வேட்டைக்கு நகரும் அரசியல் இதுதான்.
அதுவும் ‘சுதந்திர’ தினத்தில் வீசப்பட்ட ஒருநாள் வசைச்சொல்லாக முடிந்துவிடவில்லை. செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் மாணவர்களிடையே பேசிய மோடி, தனது ’சுதந்திர’ தினப் பேச்சை “ஹோமியோபதி மாத்திரை”யுடன் ஒப்பிட்டு, அதைக் கேட்டதும் மறைந்திருந்த ‘திமாகி நக்சல்கள்’ ஒவ்வொருவராக வெளியே வந்துவிட்டதாக மீண்டும் கொக்கரித்தார். இந்தத் தர்க்கத்தைப் பாருங்கள்: “திமாகி நக்சல்” என்று முத்திரை குத்தப்படுவதை எதிர்த்தாலே, அந்த எதிர்ப்பே நீங்கள் “திமாகி நக்சல்” என்பதற்கான சான்றாகிறது! குற்றத்தை நிரூபிக்க வேண்டியதில்லை; முத்திரையை மறுப்பதே குற்றச்சான்று.
இந்தச் சொல்லின் எல்லை எங்கே என்று பா.ஜ.க-வின் அமரீந்தர் சிங்கே கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. “திமாகி நக்சல்” என்பவர் யார், சட்டபூர்வமான ஜனநாயக எதிர்ப்பிலிருந்து அவரை எப்படிப் பிரிப்பது என்று அவர் செப்டம்பர் 3-இல் கேள்வி எழுப்பினார். அமரீந்தர் திடீரென ஜனநாயகவாதியாகிவிட்டார் என்பதல்ல; சட்ட வரையறையே இல்லாத இந்த முத்திரைக்குள் அரசுக்கு தொந்தரவாகும் மாணவர் முதல் தொழிலாளர், விவசாயி, பத்திரிகையாளர், அறிவுஜீவி வரை யாரையும் தள்ள முடியும் என்பதைத்தான் அது அம்பலப்படுத்துகிறது.
இந்தப் பேச்சு எந்தச் சூழலில் வருகிறது என்பதும் முக்கியம். சில வாரங்களுக்கு முன்பு தடியடி, தடுப்புகள், வழக்குகள் கொண்டு அடக்க முடியாத இளைஞர் போராட்டம் ஒரு மத்திய அமைச்சரின் பதவியைப் பறித்திருக்கிறது. அதன்பின் ‘சுதந்திர’ தின உரையில் இளைஞர்களுக்கான போட்டித் தேர்வுப் பயிற்சி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி போன்ற சலுகைகளை மோடி அறிவிக்கிறார்; அதே உரையில் “திமாகி நக்சல்களை” தனிமைப்படுத்தவும் அழைக்கிறார். ஒருபுறம் இளைஞர்களை அரவணைப்பது போல நடிக்க வேண்டும்; மறுபுறம் கட்டுப்படுத்த முடியாத அரசியல் எதிர்ப்பை ஆபத்தான சிந்தனையாகக் குறியிட வேண்டும். ஆட்சியின் தற்போதைய முரண்பாடு இதுதான்.
இந்த “மூளை வேட்டை” மேடைப் பேச்சோடு நிற்கவில்லை. ஜூலை மாதம் சி.ஜே.பி. போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை செப்டம்பர் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதற்குப் பிறகும், கிரேட்டர் நொய்டா நிர்வாகம் கௌதம் புத்தா பல்கலைக்கழக சட்ட மாணவர் அக்ஷத் திரிபாதியிடம் ரூ.5 லட்சம் சொந்தப் பிணை எழுதிக் கொடுத்து ’அமைதியைப் பேண’ வேண்டுமென்று நோட்டீசு அனுப்பியது. ’அரசுக்கு எதிரான, தவறாக வழிநடத்தும் கருத்துகளை’ அவர் மாணவர்களிடம் பரப்பித் தூண்டுவதாக போலீசுதுறை அறிக்கை குற்றஞ்சாட்டியது. நோட்டீசு பின்னர் திரும்பப் பெறப்பட்டாலும், செப்டம்பர் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றமே “எங்கள் உத்தரவு இருக்கும்போது இந்த நோட்டீசு அனுப்ப மாஜிஸ்திரேட்டுக்கு எப்படி துணிவு வந்தது?” என்று கேட்டு விளக்கம் கோரியது. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்கும் மாணவரையே “அமைதிக்கான அச்சுறுத்தல்” என்று எழுதத் தொடங்கிய நிர்வாகம், மோடியின் “திமாகி நக்சல்” அரசியலின் நடைமுறை முகத்தையே காட்டுகிறது.
ஆனால் பிரச்சினை இளைய தலைமுறையோடு நின்றுவிடவில்லை. இப்போது பள்ளிக் குழந்தைகளே சாலைகளை மறித்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் 2010-க்குப் பிறகு பிறந்த புதிய ஜென் ஆல்ஃபா (Gen Alpha) தலைமுறை மாணவர்கள் ஆசிரியர்கள் வேண்டும், மின்விசிறி வேண்டும், கழிப்பறை வேண்டும், குடிநீர் வேண்டும் என்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடியுள்ளனர். உ.பி-யின் ஃபதேபூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மணிக்கணக்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்; லக்னோவில் அரசுப் பள்ளி மாணவிகள் ஆசிரியர் பற்றாக்குறைக்கும் அடிப்படை வசதிகளின்மைக்கும் எதிராக சாலையில் இறங்கியுள்ளனர்; அசாம்கரில் ஆசிரியர் இல்லாததைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துள்ளனர்.
இவர்கள் கேட்பது ஆடம்பரங்கள் அல்ல. ஆசிரியர் வேண்டும்; குடிநீர் வேண்டும்; கழிப்பறை வேண்டும்; பள்ளியில் மின்சாரம் வேண்டும். ‘சுதந்திரம்’ அடைந்து எண்பது ஆண்டுகள் நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகின்ற, நாட்டை வல்லரசாக்கி விட்டதாக மார்தட்டுகின்ற ‘விஸ்வகுரு’ ஆட்சியிடம் பள்ளிக் குழந்தைகள் கேட்பது இவ்வளவுதான்.
அதிலும் முக்கியமானது அவர்களிடம் வெளிப்படும் அச்சமின்மை. எதிரில் இருப்பது அமைச்சர் என்றாலும், மாவட்ட ஆட்சியர் என்றாலும், போலீசுதுறை என்றாலும், “எங்கள் பள்ளிக்கான வசதிகள் எங்கே?” என்று நேரடியாகக் கணக்கு கேட்கிறார்கள். அச்சுறுத்தினால் பின்வாங்கிவிடும் தலைமுறையாக அவர்கள் இல்லை. அதிகாரத்தின் முகத்துக்கு நேராகக் கேள்வியை வீசும் இந்தப் புதிய மனநிலைதான் ஆளும் வர்க்கத்தின் பழைய கணக்குகளைத் தடுமாறச் செய்கிறது.
இவர்கள் கேட்பதெல்லாம்
காங்கிரசு பத்தாண்டு ஆட்சியில் கொடுக்க மறுத்ததுதானே!
இங்குதான் சிதம்பரத்தின் புதிய “நக்சல்” வேடத்தின் உண்மையான அரசியல் பொருள் வெளிப்படுகிறது.
அரசுப் பள்ளியில் ஆசிரியர் இல்லாதது 2014-க்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரச்சினையா? அரசுக் கல்விக்கான நிதிப் பற்றாக்குறை, தனியார்மயமாக்கல், நகரம்–கிராமம் கல்வி ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பின்மை, போட்டித் தேர்வுகளைச் சுற்றிய வணிகம் ஆகிய அனைத்தும் மோடி ஆட்சியில் முதன்முறையாக முளைத்தவையா?
இல்லை. காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) பத்தாண்டுகள் ஆட்சி செய்தபோதும் அரசுக் கல்வி புறக்கணிக்கப்பட்டது; தனியார் கல்விச் சந்தை வளர்க்கப்பட்டது; இதே தாராளமய–தனியார்மயப் பொருளாதாரப் பாதையில்தான் நாடு செலுத்தப்பட்டது.
2013-இல் நாடாளுமன்றத்தில் பேசிய சிதம்பரம், தனது “அடிப்படை உள்ளுணர்வு ஒரு சீர்திருத்தவாதியின் உள்ளுணர்வு” என்று கூறினார். மேலும், இந்தியாவுக்குத் தேவை மேலும் சீர்திருத்தம், குறைந்த கட்டுப்பாடு, மேலும் திறந்த பொருளாதாரம் என்பதையே வாதிட்டார்.
அவர் சொன்ன “சீர்திருத்தம்” யாருடைய வாழ்க்கையைச் சீர்திருத்தியது என்பதைத்தான் இன்று வீதியில் நிற்கும் தலைமுறை கேட்கிறது. அரசுப் பள்ளியில் ஆசிரியர் காலியாக இருக்கட்டும்; மருத்துவம் சந்தையாகட்டும்; பொதுத்துறை தனியாரிடம் போகட்டும்; பெருநிறுவன மூலதனத்திற்கான தடைகள் அகற்றப்படட்டும் — இவற்றுக்குப் பெயர் “சீர்திருத்தம்”. ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆசிரியர் வேண்டும், வேலை வேண்டும், கல்வி வேண்டும் என்று வீதிக்கு வந்தால், அந்த மக்கள் அழுத்தமே ஆளும் வர்க்கத்தின் “சீர்திருத்தங்களுக்கு” தொந்தரவாகிறது.
இந்த ஆளும் வர்க்க அரசியலின் நம்பகமான அடியாட்களில் ஒருவர்தான் ப.சிதம்பரம். இன்று அதே சிதம்பரம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராளியைப் போல “திமாகி நக்சல்” பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக்கொள்கிறார்.
நேற்று நக்சலை வேட்டையாடியவர் இன்று நக்சல்!
2009-இல் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு செலுத்திய மாநிலங்களை ஒருங்கிணைந்த நடவடிக்கைக்குக் கொண்டுவந்து, கூடுதல் துணை இராணுவப் படைகளை மாநிலங்களுக்கு அனுப்பச் செய்தவர் சிதம்பரம்தான். மாவோயிஸ்ட் கட்சியை ஒடுக்குவது நீண்டகாலப் போராட்டமாக இருக்கும் என்று பேசியதும் அவர்தான்.
அந்தக் காலத்தில்தான் “ஆபரேஷன் கிரீன் ஹன்ட்” என்ற பெயரில் மாவோயிஸ்ட் அழிப்பு வேட்டையை மன்மோகன் அரசு நடத்தியது. இன்று அமித்ஷா கொக்கரிப்பதைப் போல அன்று கொக்கரித்துக் கொண்டு, மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் திட்டத்துக்குத் தலைமை தாங்கியது இதே சிதம்பரம்தான்.
ஆகவே இன்று அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி மிகவும் எளிது: மிஸ்டர் சிதம்பரம், நீங்கள் எப்போதிலிருந்து நக்சலைட் ஆனீர்கள்? பஸ்தர் காடுகளுக்குள் துணை இராணுவப் படைகளை அனுப்பியபோதா? மாவோயிஸ்டுகளை ஒடுக்க மாநிலங்களை ஒருங்கிணைத்தபோதா? அல்லது மோடி “திமாகி நக்சல்” என்று சொன்ன மறுநாள் எக்ஸ் தளத்தில் பதிவு போட்ட பிறகா?
இந்திய அரசு காடுகளில் தேடிக்கொண்டிருந்த அந்த ‘நக்சல்’ பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரத்தின் எக்ஸ் கணக்கிலேயே கிடைத்திருக்கிறார் என்றால், வரலாற்றின் பகடிக்கு எல்லையே இல்லை!
நேற்று மாவோயிஸ்டுகளை ஒடுக்க சிதம்பரம் மத்தியப் படைகளை அனுப்பியபோது, மாவோயிஸ்ட் ஒழிப்பின் அடிப்படைத் திசையில் சிதம்பரத்துக்கும் காவிகளுக்கும் முரண்பாடு இல்லை; யார் இன்னும் கடுமையாக ஒடுக்குவது என்பதில்தான் போட்டி இருந்தது. இன்று அதே சிதம்பரம், மோடியின் “திமாகி நக்சல்” முத்திரையை எதிர்த்ததும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது ஆதரவாளர்களைப் பேட்டி கொடுக்க வைத்து, அவருக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது காவிக் கூட்டம்.
கனிம வளம், கார்ப்பரேட் நலன் —
அந்த சிதம்பரம் எங்கே போனார்?
சிதம்பரத்தின் இந்தக் கடந்தகால நடவடிக்கைகள் எல்லாம் வெறும் பாதுகாப்புக் கொள்கை வேறுபாடுகள் அல்ல. மாவோயிஸ்ட் செல்வாக்கு வலுவாக இருந்த மத்திய இந்தியப் பகுதிகள் பெரும் கனிம வளங்களைக் கொண்டவை. 2009-லேயே அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், கனிம வளம் நிறைந்த பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்வது முதலீட்டுச் சூழலைப் பாதிக்கும் என்று நாடாளுமன்றத்தில் ஒப்பாரி வைத்தார்.
அரசின் ஆளும் வர்க்கக் கவலை இதைவிடத் தெளிவாக இருக்க முடியுமா?
கீழே கனிம வளம்; மேலே தலைமுறை தலைமுறைகளாக வாழும் பழங்குடி மக்கள். ஒருபுறம் நிலம், காடு, வாழ்வாதாரம்; மறுபுறம் பெருநிறுவன முதலீடு. இந்த முரண்பாட்டை “உள்நாட்டுப் பாதுகாப்பு” என்ற பெயரில் கையாண்ட அரசின் உள்துறை அமைச்சர்தான் சிதம்பரம்.
அவரது சொந்த அரசியல்–தொழில் பின்னணியும் இந்த உலகத்துக்குத் தெரியாத ரகசியமல்ல. 2003-இல் வேதாந்தாவுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சிதம்பரம், பின்னர் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் நிர்வாகம் சாரா இயக்குநரானார். 2004 மே 22-இல் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்றதும் அவர் வேதாந்தா வாரியத்திலிருந்து விலகியதாக நிறுவனத்தின் ஆண்டறிக்கையே பதிவு செய்கிறது. சிதம்பரம் வாரியத்திலிருந்து விலகினார்; ஆனால் வேதாந்தாவின் நியாம்கிரி திட்டம் இந்திய அரசின் கதவுக்கு வெளியே நின்றுவிடவில்லை.
ஒடிசா அரசுடன் வேதாந்தா 2003-லேயே லஞ்சிகரில் அலுமினா சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்தில் இறங்கியிருந்தது; அந்த ஆலையின் உயிர்நாடி நியாம்கிரி மலைகளின் பாக்சைட். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், 2004 ஜூலை முதல் அக்டோபர் வரை தள அனுமதி, சுரங்கக் குத்தகை ஒப்புதல், சுற்றுச்சூழல் அனுமதி, ஒடிசா சுரங்கக் கழகம்–வேதாந்தா ஒப்பந்தம் என திட்டம் அரசு அனுமதிகளின் படிக்கட்டுகளில் வேகமாக முன்னேறியது. பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த மத்திய அதிகாரக் குழுவே, சுரங்கத்தையும் சுத்திகரிப்பு ஆலையையும் செயற்கையாகப் பிரித்து அனுமதி பெற்ற முறையைச் சாடியதுடன், பழங்குடி மக்களின் இடப்பெயர்வையும் சுற்றுச்சூழல் சட்ட மீறல்களையும் சுட்டிக்காட்டியது.
இதை வெறும் “முன்னாள் நிறுவன இயக்குநர்” என்ற தனிப்பட்ட தொடர்பாகப் பார்க்க முடியாது. கீழே பழங்குடி மக்களின் நிலம், காடு, மலை; அதன் அடியில் பாக்சைட்; அதை நோக்கி வேதாந்தா போன்ற பெருநிறுவனங்கள்; அவற்றுக்கு வழி திறக்கும் தாராளமய அரசு. இந்தக் கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசியல் நிர்வாகியாக நின்றவர்களில் ஒருவர்தான் சிதம்பரம். மூலதனத்துக்குத் தடைகளை அகற்றும் ஒவ்வொரு “சீர்திருத்தமும்” நிலம், காடு, வேலை, கல்வி மீது தாக்குதலாக மாறும்போது மக்கள் எதிர்ப்பும் உருவாகிறது; அந்த எதிர்ப்பை அடக்குவதற்கே அரசு மேலும் ஒடுக்குமுறையை ஏவுகிறது. நிதியமைச்சராக இருந்தபோது மூலதனத்துக்கு மேலும் திறந்த பொருளாதாரத்தைக் கோரி வாதிட்டவர்; பின்னர் உள்துறை அமைச்சராக கனிம வளம் நிறைந்த மத்திய இந்தியப் பகுதிகளில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு இராணுவமய ஒடுக்குமுறைக்குத் தலைமை தாங்கியவர். நிறுவன வாரியத்திலிருந்து அமைச்சரவை மேசைக்கும், அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கும் வேடம் மாறியது; சேவை செய்த வர்க்கம் மாறவில்லை.
அப்படியானால், கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைகளுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் ஆஜராகி, உழைக்கும் மக்களுக்கு எதிராக வாதாடுவதையே வாழ்நாள் கடமையாகச் செய்து கொண்டிருக்கும் அவரது மனைவி நளினி சிதம்பரத்துக்கும் இந்தப் புதிய “நக்சல்” குடும்ப உறுப்பினர் அட்டை கிடைக்குமா? அல்லது எக்ஸ் தளத்தில் தனக்குத்தானே முத்திரையிட்டுக் கொண்டால்தான் இந்தப் புரட்சிகரப் பட்டம் கிடைக்குமா?
காவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்
அளவுக்கு மட்டும் ஜனநாயகம்!
மோடி ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுகின்றன என்று காங்கிரசு கூறுவது பொய்யல்ல. எதிர்க்கட்சிகளை விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்குவது, போராட்டங்களை ஒடுக்குவது, விமர்சகர்களை “நகர்ப்புற நக்சல்”, “தேசவிரோதி”, இப்போது “திமாகி நக்சல்” என்று முத்திரை குத்துவது அனைத்தும் உண்மையான பாசிச அபாயங்களே.
ஆனால் கேள்வி இதுதான்: காங்கிரசு எந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற விரும்புகிறது?
மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசை முற்றுகையிட்டு, போராடி, ஆட்சியைப் பணியவைக்கும் ஜனநாயகமா? பள்ளிக் குழந்தைகள் வகுப்பைப் புறக்கணித்து ஆசிரியரைப் பெற்றுக்கொள்ளும் ஜனநாயகமா? வேலை கேட்டுப் போராடும் இளைஞர்கள் அதிகாரத்தைக் கட்டாயப்படுத்தும் ஜனநாயகமா? தொழிலாளர்கள் தனியார்மயத்தை எதிர்க்கும் ஜனநாயகமா? பழங்குடி மக்கள் தங்கள் நிலம்–காடு–கனிம வளங்களின் மீது உரிமை கோரும் ஜனநாயகமா?
அல்லது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தங்களை முற்றிலுமாக அரசியல் களத்திலிருந்து துடைத்தெறியாமல், தேர்தலில் நிற்கவும், நாடாளுமன்றத்தில் பேசவும், நாளை மீண்டும் ஆட்சிக்கு வரவும் தேவையான அளவுக்கு மட்டும் ஜனநாயகமா? காங்கிரசின் நடைமுறை இரண்டாவது வரம்பில்தான் நிற்கிறது.
இன்றைய மாணவர்–இளைஞர் எழுச்சியில் காங்கிரசு தலைவர்கள் கண்டன அறிக்கைகள் விடலாம்; நாடாளுமன்றத்தில் பேசலாம். ஆனால் மாணவர்களின் கோரிக்கைகளைத் தமது சொந்த அரசியல் நடவடிக்கையாக மாற்றி, அரசுக் கல்வியைப் பாதுகாக்கவும் தனியார்மயத்தை எதிர்க்கவும் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தை ஏன் கட்டியெழுப்புவதில்லை?
காரணம் எளிதானது. அந்தப் போராட்டம் மோடியுடன் முடிந்துவிடாது.
நாளை காங்கிரசு ஆட்சிக்கு வந்தாலும் அதே மக்கள் அதே கோரிக்கைகளுடன் அதன் கதவையும் தட்டுவார்கள். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பச் சொல்வார்கள்; வேலை கொடுக்கச் சொல்வார்கள்; தனியார்மயத்தை நிறுத்தச் சொல்வார்கள்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளைக் கேள்வி கேட்பார்கள்.
மக்கள் போராடும் உரிமையை முழுமையாக ஆதரித்துவிட்டால், அந்தப் போராட்ட உரிமை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க-க்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படும் ஆயுதமாக இருக்காது; ஆளும் வர்க்கத்தின் எந்த அரசுக்கு எதிராகவும் திரும்பும். அதனால்தான் மக்கள் தாங்களாக அமைப்பாகிப் போராடுவதைவிட, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களிடம் வாக்கை ஒப்படைப்பதையே காங்கிரசு போன்ற கட்சிகள் பாதுகாப்பான ’ஜனநாயகமாக’க் கருதுகின்றன.
அவர்களுக்கு ஜனநாயகம் வேண்டும் — ஆனால் காவிகளின் பாசிசத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு மட்டும். ஆளும் வர்க்கத்தின் இன்னொரு அரசியல் பிரிவாகத் தங்களை வாழவிடும் ஜனநாயகமே அவர்களுக்கு வேண்டும்; ஆளும் வர்க்கத்தையே மக்கள் கண்காணித்து, கட்டுப்படுத்தி, பணியவைக்கும் ஜனநாயகம் வேண்டாம்.
இதுதான் சிதம்பரத்தின் “திமாகி நக்சல்” வேடத்தின் வர்க்க எல்லை.
வேடம் மாறுகிறது; வர்க்கம் மாறவில்லை!
மோடி அரசின் “திமாகி நக்சல்” முத்திரையை சாதாரண அரசியல் வசைச்சொல்லாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆயுத எதிரியை ஒழித்துவிட்டதாக அறிவித்தவுடன், அரசியல் சிந்தனையையே அடுத்த உள்நாட்டு எதிரியாக முன்வைத்து, அந்தச் சிந்தனையாளர்களை “அடையாளம் கண்டு தனிமைப்படுத்துங்கள்” என்று நாட்டின் பிரதமர் அழைப்பது கடுமையான பாசிச அபாயத்தின் அறிகுறி. அதை சமரசமின்றி எதிர்க்க வேண்டும். சுதந்திர தினத்தில் வீசப்பட்ட இந்த முத்திரைக்கு எதிர்ப்பு எழுந்த பிறகும் மோடி திரும்பப் பெறவில்லை; செப்டம்பர் 5-இல் மாணவர்களிடையே மீண்டும் எடுத்துச் சொன்னார். எனவே இது ஒருநாள் பேச்சின் தடுமாற்றமல்ல; எதிர்ப்பாளரை உள்நாட்டு எதிரியாக்கும் திட்டமிட்ட அரசியல் ஆயுதம்.
ஆனால் அதை எதிர்ப்பதற்காக சிதம்பரத்தின் தோளில் சிவப்புத் துண்டு கட்டி அவரைப் புரட்சியாளனாக்க வேண்டியதில்லை. அவரது வரலாறு நமக்குத் தெரியும். வேதாந்தாவுக்காக வழக்காடி, அதன் வாரியத்தில் பொறுப்பிலும் இருந்தவர்; நியாம்கிரி பாக்சைட்டைக் கொள்ளையிடத் துடித்த லஞ்சிகர் திட்டம் அரசு அனுமதிகளுடன் முன்னேறிய காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர்; மேலும் திறந்த பொருளாதாரத்துக்காக நாடாளுமன்றத்தில் ஒப்பாரி வைத்தவர்; பின்னர் மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய துணை இராணுவப் படைகளை அனுப்பி, மாநிலங்களை ஒருங்கிணைத்த உள்துறை அமைச்சர்.
இன்று எக்ஸ் தளத்தில் “நானும் திமாகி நக்சல்” என்று அவர் எழுதிவிட்டதால் அந்த வரலாறு அழிந்துவிடாது. மாறாக, இந்த வேடமாற்றத்திற்கான காரணத்தை இன்றைய இளைஞர்–மாணவர் எழுச்சியில்தான் தேட வேண்டும்.
மோடி அரசு மீதான அச்சம் உடைந்து கொண்டிருக்கிறது. அமைச்சரைப் பதவி விலகச் செய்ய முடியும் என்பதை இளைய தலைமுறை காட்டிவிட்டது. ஆசிரியரை நியமிக்க வைக்கவும், பள்ளி நிர்வாகத்தைப் பணிய வைக்கவும், அடிப்படை வசதிகளுக்காக அரசை எதிர்கொள்ளவும் முடியும் என்று பள்ளிக் குழந்தைகளே கற்றுக்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தலைமுறை “எங்களுக்கு யார் ஆட்சி வேண்டும்” என்று மட்டும் சொல்லவில்லை; “நீ ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தாய்?” என்றும் கேட்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கேள்விதான் மோடிக்கும் ஆபத்து. அதே கேள்விதான் சிதம்பரத்துக்கும் ஆபத்து. அதனால்தான் ஒருவர் இந்த எழுச்சிக்குள் “திமாகி நக்சல்” என்ற பெயரில் எதிரியை உருவாக்க முயல்கிறார்; இன்னொருவர் அதே பெயரைத் தனது நெற்றியில் ஒட்டிக்கொண்டு எழுச்சியின் பக்கம் நிற்பவரைப் போல வேடமிடுகிறார்.
இருவரையும் மக்கள் அடையாளம் காண வேண்டும். மோடியின் பாசிச “மூளை வேட்டை”க்கு எதிராக ஜனநாயக உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராட வேண்டும். அதே நேரத்தில், மக்களின் போராட்டங்களையும் மாணவர் எழுச்சிகளையும் தங்களது தேர்தல் அறுவடையாக மாற்றுவதற்காக திடீர் ஜனநாயகவாதிகளாகவும் “நக்சல்களாகவும்” வேடமிடும் ஆளும் வர்க்கச் சந்தர்ப்பவாதிகளையும் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்த வேண்டும்.
மக்களின் போராட்டம் காங்கிரசின் தேர்தல் முதலீடு அல்ல; மாணவர் எழுச்சி எந்த ஆளும் வர்க்கக் கட்சிக்கும் அறுவடை நிலம் அல்ல.
மோடியின் பாசிசத்தை முறியடிக்கும் சக்தி சிதம்பரத்தின் வேடமாற்றத்தில் இல்லை. ஆசிரியர் வேண்டுமெனக் கேட்டு பள்ளிக் கதவைத் தாண்டி வீதிக்கு வரும் குழந்தைகளிடமும், வேலை கேட்டு அதிகாரத்தை எதிர்க்கும் இளைஞர்களிடமும், தமது உரிமைக்காகத் தாங்களே அமைப்பாகி ஆட்சியாளர்களைப் பணியவைக்க முடியும் என்று கற்றுக்கொள்ளும் உழைக்கும் மக்களிடமும்தான் இருக்கிறது. ஆனால் தன்னிச்சையாக வெடிக்கும் இந்த எதிர்ப்புகள் தாமாகவே ஆளும் வர்க்க அரசியலை முறியடித்துவிடாது; அவை வர்க்க உணர்வும் புரட்சிகர அமைப்பும் அரசியல் தலைமையும் பெற்றால்தான் நிலையான சக்தியாக மாறும்.
அந்தச் சுயாதீன மக்கள் அரசியலைக் காத்து வளர்ப்போம்! காவிப் பாசிசக் கும்பலின் “மூளை வேட்டையையும்”, அதைத் தனது அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்தத் துடிக்கும் காங்கிரசின் “நக்சல் வேடத்தையும்” ஒருசேர அம்பலப்படுத்துவோம்!
![]()
தமிழ்ச்சுடர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











