டெல்லி எஸ்.ஐ.ஆர்.: மூன்றில் ஒரு பங்கு பெயர்களை நீக்கி தேர்தல் ஆணையம் மோசடி

டெல்லியின் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கான 48 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலை புலனாய்வுக் குழு வெளிக் கொணர்ந்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலான பெயர்கள் நகரத்தின் குடிசைப் பகுதிகளிலும் மனைப் பட்டா இல்லாத சாலையோரக் குடிசைப் பகுதிகளிலும் அன்றாடம் உழைத்து வாழ்கின்ற ஏழை எளிய மக்களாவர்.

இடதுசாரிக் கட்சிகளின் புலனாய்வுக் குழு

எஸ்.ஐ.ஆர். (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற பெயரில் பாசிச பா.ஜ.க. ஆட்சியாளர்கள் தேர்தல் ஆணையத்தை தமதாக்கிக் கொண்டு நாடு முழுவதும் அதன் விருப்பத்திற்கேற்ப வாக்காளர் பட்டியலில் திருத்தங்களையும் நீக்கங்களையும் செய்து வருவது நாடே அறிந்த ஒன்று. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது டெல்லியில் SIR நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

புதிய வாக்காளர் பட்டியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்ற மோசடிகளை வெளிக்கொண்டுவரவும் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்குரிமையைப் பெற்றுத் தரவும் CPI, CPM, RSP, CPI (ML) மற்றும் ஃபார்வேர்டு பிளாக் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து ஆய்வு மேற்கொண்டன.

பேராசிரியர் வர்ஷனேய் (CPI), அனுராக் சக்சேனா (CPM), ஸ்வேதா (CPI- ML), RS. டாகர் (RSP) மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சியின் தர்மேந்திர குமார் வர்மா ஆகியோர் அடங்கிய புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, தேர்தல் ஆணையமானது சிறப்பு திருத்தம் என்கிற பெயரில் வாக்காளர் பட்டியலில் செய்திருக்கின்ற மோசடிகளையும் தகிடு தித்தங்களையும் ஆதாரப்பூர்வமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது. மேலும் இக்குழு டெல்லி தலைமைத் தேர்தல் அலுவலர் அசோக்குமார் மற்றும் இணைத் தேர்தல் அலுவலர் பலராம் மீனா ஆகியோரிடம் இம்முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை ஒப்படைத்ததிருக்கிறது.

டெல்லியின் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கான 48 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலை புலனாய்வுக் குழு வெளிக் கொணர்ந்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலான பெயர்கள் நகரத்தின் குடிசைப் பகுதிகளிலும் மனைப் பட்டா இல்லாத சாலையோரக் குடிசைப் பகுதிகளிலும் அன்றாடம் உழைத்து வாழ்கின்ற ஏழை எளிய மக்களாவர். பா.ஜ.க.-வின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட அடித்தட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எண்ணத்தோடு இம்மோசடியைத் தெரிந்தே செய்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

தேர்தல் ஆணையம் இக்குடியிருப்புப் பகுதிகளுக்கு உரிய பி.எல்.ஓ. எனப்படும் அலுவலர்களை நியமிக்கவில்லை என்பதுடன் வாக்காளர் திருத்தப்பட்டியலுக்கான விண்ணப்பங்கள் ஒழுங்காக விநியோகிக்கப்படவில்லை. ஆங்காங்கே கொடுத்தவற்றிலும், படிப்பறிவு குறைந்த அம்மக்களுக்கு விண்ணப்பங்களை நிறைவு செய்ய எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. மேலும் அம்மக்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற தேவையான பல ஆவணங்களைப் பெற்றிருந்த போதிலும் அவர்களது பெயர்கள் தடாலடியாக நீக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் இம்முறைகேடுகளை இடதுசாரி கட்சிகளின் புலனாய்வுக் குழு ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி இருக்கிறது.

சென்ற 2025 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த 11 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பது கவனத்திற்குரியதாகும். இக்குறுகிய காலத்தில் இது எப்படிச் சாத்தியம் என்கிறது என்று கேள்வி எழுப்புகிறது இந்த புலனாய்வுக் குழு. அந்த 11 லட்சம் வாக்காளர்களுக்கும் இத்திருத்தம் குறித்த தகவல் அனுப்பப்பட்டதா என்றும் அவர்களிடமிருந்து முறையான பதில்கள் பெறப்பட்டனவா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

ஆகவே நீக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களின் முறையான விண்ணப்பங்களுடன் வாக்காளர் அட்டை பெறத் தேவையான ஆவணங்களைக் கேட்டுப் பெற்று வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சேர்க்கப்பட வேண்டும். வாக்காளர் அட்டையைப் புதுப்பிக்க இப்போது விதிக்கப்பட்டிருக்கும் செப்டம்பர் 30 என்னும் வரம்பை தேவைக்கு ஏற்பத் தள்ளி வைக்க வேண்டும். மேலும் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும். பின்னர் முறையான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மீண்டும் வெளியிட வேண்டும் என்று புலனாய்வுக் குழு தேர்தல் ஆணையத்துக்குத் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

பா.ஜ.க.-வுக்குத் தேவையில்லாத இஸ்லாமிய மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களை வாக்குரிமை அற்றவர்களாகக் கழித்துக் கட்ட வேண்டும் என்கிற அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே தேர்தல் ஆணையத்தின் இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை இத்தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

செய்தி ஆதாரம்: Communist Party of India facebook.com


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க