வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) ஏற்பட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி போராட்டத்தை நடத்துவதாக கரப்பாம்பூச்சி ஜனதா கட்சி அறிவித்திருந்த நிலையில் அகில இந்திய மாணவர் சங்கம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அதே தேதியில் டெல்லி ஜந்தர் மந்தரில் காலை 11 மணிக்குப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
போராட்ட நாள் அன்று காலை போலீசு அனுமதி மறுத்து விட்டது. பின் ஜந்தர் மந்தர் சுற்றியுள்ள மத்திய டெல்லி பகுதியில் 4,000 போலீசு மற்றும் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன. ஜந்தர் மந்தருக்கு வர முடியாதவாறு 11 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. ஜந்தர் மந்தரை அடையும் பாதைகளில் பல தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. இதனால் ஜன்பத், டால்ஸ்டாய் சாலை, அசோகா சாலை போன்ற இடங்களில் மக்கள் திரள ஆரம்பித்தனர். குழுக்களாகக் கூடி நின்ற மக்களைக் குண்டு கட்டாகக் கைது செய்தது போலீசு. அவர்களை பேருந்தில் ஏற்றி வெவ்வேறு தொலைதூர போலீசு நிலையங்களுக்கு அழைத்துச் சென்றது.
இதில் அகில இந்திய மாணவர் அமைப்பின் தேசிய தலைவர் நேஹா போரா, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சௌரப் பரத்வாஜ், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் அராஜகமாகக் கைது செய்தது போலீசு.
ஜந்தர் மந்தருக்கு செல்ல முடியாததால் ஜன்பத் பகுதியைப் போராட்டத்தின் மையமாக மாற்றி “ஞானேஷ்குமார் ஒழிக”, “வாக்குத் திருடனே, ஆட்சியை விட்டு வெளியேறு”, “ஜெய் பீம்”, “மோடிக்கு பயம் வந்தால் அவர் போலீசை ஏவுவார்” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
அந்த நாளின் முடிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தது போலீசு.
ஆனாலும் மக்கள் போராட்டத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் ஜந்தர் மந்தரில் மக்கள் கூடினர். “ஞானேஷ் குமார் ஒரு துரோகி” என்று முழக்கமிட்டனர். இவர்களையும் போலீசு வலுக்கட்டாயமாகக் கைது செய்து தடுப்பு காவலில் அடைத்தது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
மக்கள் போராட்டங்களைக் கண்டு அஞ்சுவது பாசிஸ்டுகளின் இயல்பாகும். மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே தான் ஜந்தர் மந்தரில் மக்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் மக்கள் கூடி விடக்கூடாது என்பதற்காகவும் ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தது இந்த பாசிச கும்பல்.
மாணவர் இளைஞர்கள் தீரத்துடன் நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டத்திற்குப் பணிந்த மோடி – அமித்ஷா பாசிச கும்பல் தங்களின் கல்வி அமைச்சரைப் பலி கொடுத்தது. ஆனால் அந்த இடத்தில் இப்போது அவருக்குச் சற்றும் சளைக்காத பிரகலாத் ஜோஷி என்ற சங்கி அங்கு அமர்ந்துள்ளார். ஆகவே ஞாணேஷ் குமாரை பதவி விலக வைப்பது பாசிச எதிர்ப்பின் முதல் கட்டமே.
இந்தக் கட்டமைப்புதான் ஞானேஷ் குமார் போன்ற தனி நபர்கள் முறைகேடுகளில் ஈடுபட சூழல்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதிகாரங்கள் ஒரு மையத்தில் குவிந்திருப்பது அவற்றை பாசிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பவை இந்தக் கட்டமைப்பின் இயல்பு. ஆகவே இந்த கட்டமைப்பைத் தகர்த்து நிர்வாக அதிகாரத்தைப் பரவலாக்குவது; தேர்தல் நிர்வாகத்தை மக்கள் வெளிப்படையாகச் சோதிக்கும் வழிமுறையை உருவாக்குவது போன்றவை தான் ஜனநாயகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கட்டமைப்பை உருவாக்கக் களத்தில் மக்கள், புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அணிதிரள வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்துவதோடு, எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்வது, இந்தக் கட்டமைப்பு மாற்றத்துக்கான போராட்டமாக டெல்லி, மும்பை போராட்டத்தை வளர்த்தெடுத்து பாசிச எதிர்ப்பு முறைகளை உள்ளடக்கிய தேர்தல் ஆணையத்தைக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்கப் போராட வேண்டும்.
![]()
ஆண்ட்ரே
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











