ஹபீபி: பாசிச எதிர்ப்புப் பாதையில் பண்பாட்டின் அவசியம்! | திரைவிமர்சனம்

வெறுப்புப் பிம்பங்களுக்கு மாற்றாக, இஸ்லாமியச் சமூகத்தின் உண்மையான வாழ்க்கையை அதன் மனிதத்தன்மையோடு பதிவு செய்கிறது, ஹபீபி. இப்படியான படைப்புகள் உருவாகும்போது, பண்பாட்டுத் தளத்தில் ஒரு மாற்று இடம் உருவாகிறது. அந்த இடத்தை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற அனுபவம், அத்திரைப்படம் ஏன் பரவலாகப் பேசப்பட வேண்டும் என்ற அரசியல் கேள்வியாக மாறியபோது…

கடந்த ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திற்குச் செல்ல நேரிட்டது. அங்குள்ள அழகர் சினிமாஸ்-இல் “ஹபீபி” திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்கி உள்ளே சென்றேன். திரையரங்கிற்குள் பார்த்த காட்சி சற்று ஏமாற்றமாக இருந்தது. மொத்தமே சுமார் பதினைந்து பார்வையாளர்கள்தான். அவர்களில் சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து, ஆறு பேர் கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பமும் இருந்தது.

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையத்தில், இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைப் பேசும் ஒரு திரைப்படத்தைப் பார்க்க இவ்வளவு குறைவான பார்வையாளர்கள்தானா என்ற எண்ணம் அப்போதே தோன்றியது. படம் வெளியானபோதே இஸ்லாமிய மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் படம் தொடங்கியது.

ஹபீபி – ஒரு காதல் கதைக்கு அப்பால்

“ஹபீபி” (தமிழில்: “என் அன்பே”) – தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தறிநெய்தல் போன்ற பாரம்பரியத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்களின் வாழ்க்கை, 1990-களுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் எவ்வாறு மாறுகிறது என்பதை படம் பதிவு செய்கிறது. விவசாயம், சிறு-குறு வணிகம் உள்ளிட்ட வாழ்வாதாரங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியால் குடும்பத்தின் ஆண்கள் அரபு நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் நிலை உருவாகிறது. அச்சூழலிலும் பாரம்பரியமான தறித் தொழிலை விட்டுக்கொடுக்க விரும்பாத யூசுப்பின் குடும்பத்தில்தான் கதை தொடங்குகிறது. அக்குடும்பத்தில் பிறக்கும் அபுதாஹிருக்கும், அந்த ஊர் சொசைட்டி (ஜமாஅத்) குடும்பத்தில் வளர்ந்த நிலோஃபருக்கும் இடையே உருவாகும் நட்பு காதலாகிறது. அந்தக் காதல் எவ்வாறு நகர்கிறது என்பதும் கதையின் ஒரு பகுதியாகிறது.

ஆனால் “ஹபீபி” வெறுமனே ஒரு காதல் திரைப்படம் அல்ல.

வெளிநாடு சென்று வேலை செய்வது பல குடும்பங்களில் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் வீடு கட்டப்படுகிறது; கடன் அடைக்கப்படுகிறது; குழந்தைகளின் கல்வி தொடர்கிறது. குடும்பத்தின் பொருளாதார நிலையும் ஓரளவு மேம்படுகிறது. ஆனால் ஆண்டுக்கணக்கில் நீளும் கணவன்–மனைவி பிரிவு, குழந்தைகளிடமிருந்து விலகியிருத்தல், பெற்றோரைப் பார்க்க முடியாத நிலை எனப் பல இழப்புகளும் அந்தப் பணத்தின் பின்னால் இருக்கின்றன. அபுவின் சாச்சா–சாச்சிக்கு (சித்தப்பா-சித்தி) இடையிலான காட்சிகள் இந்தப் பிரிவின் வலியை இயல்பாகப் பதிவு செய்கின்றன.

அதேபோல், இந்தியாவில் முதலாளி என்று அழைக்கப்படுபவர் அரபு நாடுகளில் “கபில்”. பெயர் வேறாக இருக்கலாம்; ஆனால் உழைப்புச் சுரண்டல் ஒன்றுதான். வெளிநாடுகளுக்குச் சென்று மாடாய் உழைத்து பணத்தைச் சேமிக்கும் தொழிலாளர்களும், அவர்களின் பணத்தைச் சுரண்டும் வட்டிக்காரர்களும் இடம்பெறும் காட்சிகள், வர்க்க அரசியலைக் கதையோடு இணைக்கின்றன.

இதனால் “ஹபீபி”யை வெறும் காதல் கதையாக மட்டும் பார்த்துவிட முடியாது.

வெறுப்புப் பிரச்சாரத்திற்கு மாறான பண்பாட்டுப் பார்வை

“ஹபீபி”யின் முக்கியத்துவத்தை இங்கிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”, “தி கேரளா ஸ்டோரி” போன்ற திரைப்படங்கள் இஸ்லாமிய மக்களைப் பற்றிய வெறுப்புப் பிரச்சாரத்திற்கான பண்பாட்டுத் தளத்தை உருவாக்கியுள்ளன. உழைக்கும் மக்களை அவர்களின் பசி, வேலை, வாழ்வாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை கவனிக்கவிடாமல், அவர்களை மதத்தின் அடிப்படையில் மட்டும் பிரிந்து சிந்திக்க வைக்கும் அரசியலுக்கு இத்தகைய படைப்புகள் துணைபுரிகின்றன.

ஆனால் “ஹபீபி” அதற்கு மாறான பாதையில் செல்கிறது.

அது இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்குள் செல்கிறது. பிறப்பு, காதல், திருமணம், குடும்ப உறவுகள், தொழில், புலம்பெயர்வு, பொருளாதார நெருக்கடி, இறப்பு என ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்கிறது. அவர்களும் நம்மை போல உழைக்கிறார்கள், காதலிக்கிறார்கள், குடும்பத்தை நடத்துகிறார்கள், பிரிவைச் சந்திக்கிறார்கள், பொருளாதார நெருக்கடியில் சிக்குகிறார்கள், எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அச்சமூகத்தின் மீது கட்டமைக்கப்பட்டு வரும் வெறுப்புப் பிம்பங்களை தகர்த்தெறிகிறது.

“ஹபீபி”யின் பண்பாட்டு முக்கியத்துவம் இதில்தான் அடங்கியிருக்கிறது.

பாசிச எதிர்ப்பு என்பது வீதியில் மட்டும் நடப்பதல்ல

பாசிச அரசியலை எதிர்ப்பது என்பது வீதியில் நடைபெறும் போராட்டங்களுக்குள் மட்டும் சுருங்கிவிட முடியாது.

மக்களின் மனங்களில் உருவாக்கப்படும் வெறுப்பு, சாதி–மத–இன அடிப்படையிலான பிளவு, சமூகங்களுக்கிடையிலான அச்சம் ஆகியவையும் பாசிச அரசியலின் ஒரு பகுதிதான். அந்தப் பிம்பங்கள் ஊடகம், சினிமா, இலக்கியம், பாடல், ஓவியம் எனப் பல்வேறு பண்பாட்டு வடிவங்கள் வழியாக உருவாக்கப்படுகின்றன.

எனவே பாசிச எதிர்ப்புப் போராட்டத்திலும் பண்பாட்டுத் தளத்தைப் புறக்கணிக்க முடியாது.

ஒரு திரைப்படம் ஒரு சமூகத்தைப் பற்றிய வெறுப்பை உருவாக்க முடியும் என்றால், அதே திரைப்படம் அச்சமூகத்தின் வாழ்க்கையை மனிதத்தன்மையோடு வெளிப்படுத்தவும் முடியும். ஒரு பாடல், ஒரு சிறுகதை, ஓர் ஓவியம், ஒரு நாடகம் ஆகியவையும் சமூகத்தில் உருவாக்கப்படும் அரசியல் பிம்பங்களை மாற்றுவதில் பங்கு வகிக்க முடியும். இந்த வகையில் “ஹபீபி”யைப் பார்க்கலாம். அதை ஒரு “பாசிச எதிர்ப்புத் திரைப்படம்” என்று முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லை. அதன் கலை, அரசியல் வரம்புகளுடன் விமர்சித்தபடியே அது பிரதிபலிக்கும் வாழ்க்கையையும் கவனிக்க வேண்டும்.

ஒரு படைப்பின் அரசியல் முக்கியத்துவம் அதன் கதாபாத்திரங்கள் அரசியல் முழக்கங்களை எழுப்புகிறார்களா என்பதில் மட்டும் இருப்பதில்லை. அது யாரைக் காணச் செய்கிறது, யாருடைய வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் செய்கிறது, எந்தப் பிம்பத்திற்கு மாற்றாக நிற்கிறது என்பதிலும் இருக்கிறது.

இஸ்லாமிய உழைக்கும் மக்களின் அரசியல் களம் விரிவடைய வேண்டும்

“ஹபீபி”யைச் சுற்றியுள்ள விவாதம் ஒரு திரைப்படத்தின் வெற்றி–தோல்வியோடு முடிந்துவிடக் கூடாது.

ஆர்.எஸ்.எஸ்–பாஜக; அம்பானி–அதானி பாசிசம் வலுப்பெறும் இன்றைய சூழலில், இஸ்லாமிய உழைக்கும் மக்களின் ஜனநாயக அரசியல் பங்கேற்பு விரிவடைய வேண்டியது அவசியம். அது தேர்தல் கால ஆதரவாக மட்டும் சுருங்கிவிடாமல், மாணவர் போராட்டங்கள், தொழிலாளர் – விவசாயிகள் போராட்டங்கள், சாதி எதிர்ப்பு – பெண்கள் உரிமை எனப் பரந்த சமூகப் போராட்டங்களுடன் இணையும் அரசியல் களமாக உருவாக வேண்டும்.

அந்தப் பதினைந்து பேரின் நினைவு…

திரைப்படம் முடிந்து வெளியே வந்தபோது, மேலப்பாளையம் திரையரங்கில் நான் பார்த்த அந்தப் பதினைந்து பேர் மீண்டும் நினைவுக்கு வந்தார்கள்.

ஒருபுறம் இஸ்லாமிய மக்களைப் பற்றிய வெறுப்புப் பிம்பங்களை உருவாக்கும் திரைப்படங்கள் பெரும் விவாதங்களை உருவாக்குகின்றன. மறுபுறம், அதே மக்களின் உழைப்பு, குடும்பம், காதல், புலம்பெயர்வு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை நெருக்கமாகப் பதிவு செய்யும் “ஹபீபி” போன்ற திரைப்படங்கள் குறைந்த பார்வையாளர்களையே சென்றடைகின்றன.

இது வெறுமனே ஒரு திரைப்படத்தின் வசூல் சார்ந்த பிரச்சினை அல்ல. நாம் எந்தப் படங்களைப் பார்க்கிறோம், எந்தப் படங்களைப் பேசுகிறோம், எந்தக் கதைகளுக்கு சமூகத்தில் இடம் கொடுக்கிறோம் என்பதுதான் இங்கு எழும் அரசியல் கேள்வி.

வெறுப்புப் பிம்பங்களுக்கு மாற்றாக, இஸ்லாமியச் சமூகத்தின் உண்மையான வாழ்க்கையை அதன் மனிதத்தன்மையோடு பதிவு செய்கிறது, ஹபீபி. இப்படியான படைப்புகள் உருவாகும்போது, பண்பாட்டுத் தளத்தில் ஒரு மாற்று இடம் உருவாகிறது. அந்த இடத்தை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.

அதனால் “ஹபீபி”யைப் பார்ப்பதும் விவாதிப்பதும் அது பேசும் வாழ்க்கையைப் பற்றி சமூகத்தில் உரையாடலை உருவாக்குவதும் ஒரு திரைப்படத்தை ஆதரிப்பது என்ற அளவைக் கடந்து செல்கிறது. பாசிசம் உருவாக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக பண்பாட்டுத் தளத்தில் உருவாகும் ஒரு சிறிய எதிர்ப்பாக அது இருக்க முடியும். அந்த எதிர்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிடக் கூடாது.

இன்குலாப் சொன்னதுபோல்: “ஆம், நமது குரல் சன்னமானதுதான். ஆனாலும் நாம் பேசியாக வேண்டும்!”


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க