மாவோ 50-வது ஆண்டு நினைவு நாள்: மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனை வெல்க!

மார்க்சிய-லெனினியக் கருவூலத்திற்கு மாவோ நல்கிய பங்களிப்புக் காரணமாகத்தான், அவர் நமது காலத்தின் மாபெரும் புரட்சியாளர்களில் ஒருவராகவும் மாபெரும் பாட்டாளி வர்க்க சர்வதேச தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். மாவோவின் புகழ் நீடூழி வாழ்க!

மாபெரும் தலைவர் ஸ்டாலினுக்குப் பிறகு, மார்க்சிய – லெனினியப் பதாகையை உயர்த்திப் பிடித்து, அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை காத்து வளர்த்து, 1960-களிலும் 1970-களிலும் உலகெங்கும் புதிய உற்சாகத்தை ஊட்டிய மாபெரும் சித்தாந்தவாதியாக, தலைவராக மாவோ திகழ்ந்தவர்.

மார்க்சிய-லெனினியக் கருவூலத்திற்கு மாவோ நல்கிய பங்களிப்புக் காரணமாகத்தான், அவர் நமது காலத்தின் மாபெரும் புரட்சியாளர்களில் ஒருவராகவும் மாபெரும் பாட்டாளி வர்க்க சர்வதேச தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

1893-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26-ஆம் நாள் பிறந்த அவர் ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் தூக்கியெறிந்த மாபெரும் சீன ஜனநாயகப் புரட்சியின் ஒளிவிளக்காகவும், பிற பின்தங்கிய விவசாய நாட்டு புரட்சிகர இயக்கங்களுக்கு புதிய பாதையைக் காட்டிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டு சீன வரலாற்றில் படிப்பினைகள், அனுபவங்களைக் கற்றறிந்தார்;  ஒரு நூற்றாண்டு கால புரட்சிகர இயக்கங்களைக் கற்றறிந்தார்;  முப்பதாண்டு காலம் நேரடியாகப் புரட்சியில் பங்காற்றினார்.  சீனாவின் மரபையும் பருண்மையான நிலைமைகளையும் எப்பொழுதுமே ஆர்வமாக கற்றறிந்தவர்.

பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தைப் பருண்மையாகப் பிரயோகிப்பதில் பாரதூர அக்கறை எடுத்துக்கொண்டு நிறைவேற்றவும் செய்தார்.  யாரையும் அவர் காப்பியடிக்கவில்லை;  ஒப்பீட்டு முடிவுகளை அவர் எடுக்கவில்லை;  பருண்மையான நிலைமைக்கு எதிரான வழிகாட்டுதல்கள் ஸ்டாலினிடமிருந்து வந்தபோதும் அவைகளை நிராகரித்தவர்.

“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்வது; அதற்கான வழிமுறையாக கலாச்சாரப் புரட்சியைக் கட்டவிழ்த்து விடுவது; அடுத்தடுத்து கலாச்சாரப் புரட்சிகள் என்ற பாதையில்தான் முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சிகளை முறியடித்து, கம்யூனிசத்தை நோக்கி முன்னேற முடியும்” என்ற மாசேதுங்கின் கோட்பாடும் நடைமுறையும் சரியென முதலாளித்துவ நாடுகளாக மீட்சி பெற்றுவிட்ட முன்னாள் சோசலிச நாடுகளின் அனுபவங்கள் எதிர்மறையில் நிரூபித்துவிட்டன.

மாசேதுங் சிந்தனையின் பிற அம்சங்களும் காலத்தால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் புரட்சியின் தன்மை “புதிய ஜனநாயகம்” (மக்கள் ஜனநாயகம்) என்ற வரையறுப்பை முதன் முதலில் முன்வைத்தவர் மாவோ.  இந்தப் புரட்சிக்கு தலைமை, பாட்டாளி வர்க்கம்;  பிரதான சக்தி, விவசாயிகள்;  விவசாயப் புரட்சியை அச்சாணியாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி என்று வரையறுத்து வழி காட்டியவர். அதன் விடுதலைக்கான பாதையாக மக்கள் யுத்தப் பாதை எனும் இராணுவ போர்த்தந்திரத்தை வகுத்து வழிகாட்டி மார்க்சிய – லெனினியத்தை வளப்படுத்தினார்.

அந்நாட்டின் பெருமுதலாளித்துவப் பிரிவினர் “தரகு முதலாளிகள்” என்று வரையறுத்து சரியான விளக்கமளித்தார். தேசிய முதலாளிகளுடன், புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் ஐக்கிய முன்னணி;  அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியவர்.

மக்களை அடிப்படையாகக் கொள்வது, கட்சி துப்பாக்கியைக் கட்டுப்படுத்த வேண்டும்;  அதாவது அரசியலை ஆணையில் வைக்க வேண்டும் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு மக்கள் இராணுவத்தைக் கட்டியமைத்து, கொரில்லா யுத்தக் கோட்பாடுகளை வகுத்து, பிரயோகித்து, வெற்றி கண்டு மார்க்சிய – லெனினிய ஞானத்தை இராணுவத்துறையில் மேலும் வளர்த்தார்.

“முரண்பாடு பற்றி”, “நடைமுறை பற்றி”, “முரண்பாடுகளை சரியாகக் கையாள்வது பற்றி” என்ற கட்டுரைகள் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை செழுமைப்படுத்தி சிந்தாந்தத்துறையில் மார்க்சிய – லெனினியத்தை உயர்ந்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார்.

“விவசாயத்திற்கு முதலிடம், சிறுரக தொழில்களுக்கு இரண்டாம் இடம்; கனரகத் தொழில்களுக்கு மூன்றாவது முக்கியத்துவம்”, மக்கள் திரளைச் சார்ந்திருத்தல், அதிகாரவர்க்க பாணியையும் மேட்டுக்குடித்தனத்தையும் ஒழித்தல், “வர்க்கப் போராட்டத்தைக் கேந்திர கண்ணியாக கொள்ளுதல்; உற்பத்தியைப் பெருக்குதல்” என்ற கொள்கைகளை பொருளாதாரத் துறையில் அமல் நடத்தி மார்க்சிய -லெனினியத்தை செழுமைப்படுத்தினார்.

சர்வதேச அளவில் எழுந்த குருச்சேவ் ரக நவீன திரிபுவாதத்தை எதிர்த்து மாபெரும் விவாதம் நடத்தி, மார்க்சிய – லெனினியத்தைப் பாதுகாத்து வளர்த்தார்.

மேல்நிலை வல்லரசுகளின் யுத்தத் தயாரிப்புகளை விடாது அம்பலப்படுத்தி, உலக யுத்த அபாயத்திற்கு எதிராக மக்களை தொடர்ந்து தயார்ப்படுத்தி வந்தார்;  காலனிய, அரைக்காலனிய, நவீன காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும் தேசிய விடுதலை யுத்தங்களையும் உற்சாகப்படுத்தி, ஐக்கியப்படுத்தி வளர்த்தார்.

எப்பொழுதும் எதற்கும் மக்களைச் சார்ந்திருந்தார்;  கொள்கையை மக்களிடம் எடுத்துச் செல்வது, அமல்படுத்த அவர்களை அணிதிரட்டுவது;  அனுபவங்கள், படிப்பினைகளைத் தொகுத்து, கொள்கையை செழுமைப்படுத்தி மறுபடியும் மக்களிடம் சென்றார்;  இதனால் நடைமுறையில் வெற்றியும் மக்கள் திரளின் பெருத்த ஆதரவையும் பெற்றார்.  கட்சிக்குள் தோன்றிய வலது, இடது விலகல்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருந்து விடாது போராடி வந்தார்;  1927-35-ஆம் ஆண்டுகளில் வாங்மிங் போன்ற இடது தீவிரவாதிகளாலும், பாரோடின் போன்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசகராலும் ஒதுக்கப்பட்ட போதும் அவர் துவளவில்லை;  மத்தியத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடந்தார்.  தான் தலைவராக இருந்தபோது, டெங் போன்றவர்கள் கருத்து மாறுபாடு கொண்டபோது சர்வாதிகாரமாக நடந்துகொள்ளவில்லை;  முழு ஜனநாயகத்தையும் அவர்கள் பயன்படுத்த குறுக்கே நிற்கவில்லை.  அதேவேளையில் தனது சரியான வழிக்கு விட்டுக் கொடுக்காமல் போராடினார்.

இப்படிப்பட்ட மாபெரும் கம்யூனிஸ்டான தோழர் மாவோ 1976-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று மரணமடைந்தார். தோழரின் 50-வது ஆண்டு நினைவுநாளில் அவரிடமிருந்து கற்று நாமும் சிறந்த கம்யூனிஸ்டாக விளங்குவோம் என உறுதி ஏற்போம்!

போலி சோசலிச நாடுகளின் வீழ்ச்சியையே கம்யூனிசத்தின் வீழ்ச்சி என ஏகாதிபத்தியவாதிகள் கொக்கரித்து வரும் இன்றைய தருணத்தில், மார்க்சிய – லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து புரட்சியை முன்னெடுத்துச் செல்வோம்.

மாவோவின் புகழ் நீடூழி வாழ்க!
மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனை வெல்க!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க