ஒரு பூதத்தின் மறுவருகை

ஒரு பூதம் சீனாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது — அதுதான் மாவோ சேதுங். அதிகாரபூர்வக் கட்சி வரலாறுகளில் உறைந்துபோன, நாட்டை நிறுவிய தலைவர் என்ற பிம்பம் அல்ல இது; சீன இளைஞர்கள் புதிதாகக் கண்டடைந்துள்ள உயிர்த்துடிப்பான சிந்தனை. இந்த மறுஎழுச்சிக்கான சான்றுகள் எதிர்பாராதவையாகவும் மறுக்க முடியாதவையாகவும் உள்ளன.

0

ஒரு பூதத்தின் பொருளாயத அடித்தளம்:
சீன இளைஞர்கள் ஏன் மாவோவை புதிதாகக் கண்டடைகிறார்கள்? – பகுதி 1

ஒரு பூதம் சீனாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது — அதுதான் மாவோ சேதுங். அதிகாரபூர்வக் கட்சி வரலாறுகளில் உறைந்துபோன, நாட்டை நிறுவிய தலைவர் என்ற பிம்பம் அல்ல இது; சீன இளைஞர்கள் புதிதாகக் கண்டடைந்துள்ள உயிர்த்துடிப்பான சிந்தனை. இந்த மறுஎழுச்சிக்கான சான்றுகள் எதிர்பாராதவையாகவும் மறுக்க முடியாதவையாகவும் உள்ளன. அவை மிகவும் தெளிவாக வெளிப்படும் களம் சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் — அரசியல், கல்வி, வணிகத் துறைகளின் எதிர்காலத் தலைவர்கள் உருவாகும் நிறுவனங்கள்.

இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, இதற்கு முன் நிலவிய அறிவுசார் சூழலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 1978-இல் சந்தைச் சீர்திருத்தங்கள் தொடங்கிய பின்னர் பல பத்தாண்டுகளாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளில் பெரும் பகுதியினர் மாவோவையும் பண்பாட்டுப் புரட்சியையும் தொடர்ந்து சாதகமாகப் பார்த்து மதித்தபோதிலும், படித்த பிரிவினரிடையே மாவோவைக் குறித்த ஆழமான சந்தேக மனநிலையே மேலோங்கியது.[1]

1993-இல் கட்சி மற்றும் அரசு ஆய்வு நிறுவனங்கள் பல இணைந்து நடத்திய அதிகாரபூர்வ ஆய்வு இந்த மனநிலையைத் தெளிவாக அளந்து காட்டியது. மாவோவை மதிப்பிடும்படி கேட்டபோது, மூத்த அறிவுஜீவிகளில் வெறும் 8 விழுக்காட்டினர் மட்டுமே அவரது குறைகளைவிட சாதனைகள் அதிகம் என்று கருதினர்; மாறாக, 67 விழுக்காடு என்ற மிகப்பெரிய பெரும்பான்மையினர் அவரது சாதனைகளைவிட குறைகளே அதிகம் என்று கருதினர். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் 40 விழுக்காட்டினர் மாவோவின் குறைகளே அதிகம் என்றனர்; கட்சியின் அதிகாரபூர்வமான “70 விழுக்காடு சரி, 30 விழுக்காடு தவறு” என்ற மதிப்பீட்டை ஏற்றுக்கொண்ட 34 விழுக்காட்டினரைவிட இது அதிகம்.

இதே மேல்தட்டினரிடம் அக்காலத்திலேயே அடித்தள மக்களிடையே உருவாகத் தொடங்கியிருந்த “மாவோ காய்ச்சல்” குறித்துக் கேட்டபோது, ஆய்வில் பங்கேற்றவர்களில் 63 முதல் 72 விழுக்காட்டினர் வரை அதை “அசாதாரணமான” நிகழ்வு என்று நிராகரித்தனர்; மக்களின் அறியாமையின் விளைவாகவே அதை அவர்கள் பார்த்தனர்.[2] 1978-க்குப் பிந்தைய படித்த மேல்தட்டினரிடையே இந்தக் கண்ணோட்டமே ஆதிக்கம் செலுத்தியது: மாவோ கடந்த காலத்தைச் சேர்ந்தவர்; அவரது மரபு நவீனமயமாக்கலுக்கான தடையாகக் கருதப்பட்டது.

2006-க்குள் நிலைமை மாறத் தொடங்கியது. சீனாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தலைமுறை மாற்றமொன்றை வெளிப்படுத்தியது. பொருளாதார எழுச்சிக் காலத்தில் பிறந்த மாணவர்களிடையே 1993-இல் நிலவிய கருத்தொற்றுமை குறிப்பிடத்தக்க அளவு சிதைந்திருந்தது. இப்போது 47 விழுக்காட்டினர் மாவோவின் குறைகளைவிட சாதனைகள் அதிகம் என்று கருதினர்; மாறான கருத்தைக் கொண்டவர்கள் வெறும் 6 விழுக்காடு மட்டுமே.

ஆனால், இது இன்னும் அமைதியான மறுமதிப்பீடாகவே இருந்தது; மாவோவின் முழு அரசியல் திட்டத்திற்கான வெளிப்படையான, முழுமையான ஆதரவு அல்ல. அதே மாணவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் பண்பாட்டுப் புரட்சியை எதிர்மறையாகவே மதிப்பிட்டனர்.[3] அதாவது, நாட்டைக் கட்டியெழுப்பிய மாவோவையும் தீவிரப் புரட்சியாளரான மாவோவையும் அவர்கள் பிரித்துப் பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

ஒருகாலத்தில் மெதுவாக நடந்த இந்த மாற்றம் 2016-க்குப் பிறகு மிக வேகமாகத் தீவிரமடைந்தது. நூலக இரவல் தரவு இதற்கு எளிதில் புரியக்கூடிய தெளிவான சான்றாக உள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சிங்குவா பல்கலைக்கழகத்தில், 2016-இல் அதிகம் இரவல் பெறப்பட்ட முதல் ஐம்பது நூல்களுக்குள்ளும் இடம்பெறாத மாவோ சேதுங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், 2019-க்குள் முதலிடத்திற்கு உயர்ந்தது. 2024 வரை ஒவ்வொரு ஆண்டும் அந்த இடத்தைத் தக்கவைத்துள்ளது.[4]

இது தனித்த சம்பவமல்ல. 2020-இல் மைக்கோஸ் நடத்திய ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட எண்பது பல்கலைக்கழகங்களில் பதின்மூன்று பல்கலைக்கழகங்களின் அதிகம் இரவல் பெறப்பட்ட முதல் பத்து நூல்களிலும் இந்தப் போக்கு காணப்பட்டது; அவற்றில் பெரும்பாலானவை முன்னணிப் பல்கலைக்கழகங்கள்.[5] கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகளை நான் தனியாகச் சரிபார்த்தபோது, 2024-இல் சீனாவின் நான்கு முன்னணிப் பல்கலைக்கழகங்களான சிங்குவா, பீக்கிங், ஃபுடான், ஷாங்காய் ஜியாவ் தோங் ஆகிய அனைத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் வருடாந்திர நூலக இரவல் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

பெய்ஹாங் பல்கலைக்கழகத்தின் அனுபவம் தனியாகக் குறிப்பிடத்தக்கது. இது சீனாவின் முன்னணி அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்று. 2020-இல், சீனாவின் “டிக்டாக்” எனக் குறிப்பிடப்படும் டோயின் தளத்தில் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வக் கணக்கு அதன் வருடாந்திர நூலக இரவல் பட்டியலை வெளியிட்டது. அது நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பகிர்வுகளையும் தூண்டியது. அதிகம் இரவல் பெறப்பட்ட நூல் பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள மாவோ சேதுங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்; இரண்டாவது இடத்தில் இருந்தது அதன் ஐந்தாம் தொகுதி.[6]

இந்த விவரம் மிகவும் முக்கியமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் 1978-க்குப் பிந்தைய அதிகாரபூர்வப் பதிப்பில் முதல் நான்கு தொகுதிகள் மட்டுமே இடம்பெறுகின்றன; அவை 1949-க்கு முந்தைய மாவோவின் எழுத்துகளை உள்ளடக்கியவை. பண்பாட்டுப் புரட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டு 1977-இல் வெளியிடப்பட்ட ஐந்தாம் தொகுதி, 1949–1957 காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்துகளைக் கொண்டுள்ளது. ஆனால், அதன் தீவிரமான அரசியல் உள்ளடக்கத்தாலும் டெங் சியாவோபிங்கை நேரடியாக விமர்சித்ததாலும், 1978-க்குப் பிறகு அது ஒடுக்கப்பட்டு, நடைமுறையில் ஒரு தடைநூலாகவே மாறியது. அந்தத் தொகுதி அரிதாகவே கிடைக்கிறது; பெரும்பாலான பல்கலைக்கழக நூலகங்களில்கூட அது இல்லை. எனவே, மாணவர்கள் அந்தத் தொகுதியைத் தேடிப் படிப்பது, மாவோவின் மிகவும் தீவிரமான சிந்தனைக் காலத்தை அவர்கள் திட்டமிட்டே ஆராய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்தப் போக்கு குறித்து மேற்கத்திய ஊடகங்களிலும் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனால், அதன் வேர்களைப் பற்றிய அவற்றின் விளக்கங்கள் பெரும்பாலும் தவறான முடிவுகளுக்குச் செல்கின்றன. அரசு மேலிருந்து நடத்தும் கருத்தியல் பிரச்சாரத்தின் விளைவாகவே இந்த நிகழ்வைப் பார்ப்பது வழக்கமான விளக்கம். “நியூயார்க் டைம்ஸ்” வெளியிட்ட விரிவான கட்டுரை இதை அதிகரிக்கும் செல்வச் சமத்துவமின்மையோடு இணைக்கிறது; ஆனால், மாவோவிடம் இளைஞர்கள் திரும்புவதை முதன்மையாக எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. பொருளாதார வீழ்ச்சிக் காலங்களில் செல்வந்தர்களுக்கு எதிராக உருவாகும் பகுத்தறிவற்ற வெறுப்பை மாவோவின் சொற்கள் நியாயப்படுத்துகின்றன என்ற கோணத்தில் அது விவரித்தது.[7]

ஆனால், இத்தகைய விளக்கங்கள் மிக முக்கியமான ஒன்றைத் தவறவிடுகின்றன: இந்த “மாவோ காய்ச்சலின்” முன்னணியில் இருப்பவர்கள் சீனாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் சமீபத்தில் பட்டம் பெற்றவர்களும்தான்.

இந்த மாணவர்கள் பொதுவாக அதிகாரபூர்வப் பிரச்சாரத்தை ஐயத்துடன் அணுகுபவர்கள். சீனாவின் உள்ளும் வெளியும் கிடைக்கும் பரந்த தகவல்களை அணுகும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு; இவர்களில் பலர் விமர்சனபூர்வமாகச் சிந்திக்கப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் மாவோவிடம் திரும்புவது மூளைச்சலவையினாலோ பகுத்தறிவற்ற வெறுப்பினாலோ அல்ல; அது அறிந்தே மேற்கொண்ட அறிவுசார் மற்றும் அரசியல் தேர்வு.

நன்கு கல்வியறிவு பெற்ற இந்தப் பிரிவுக்குள்ளேயே தன்னிச்சையாக உருவான இந்தப் போக்கின் தன்மையை, சீனாவின் தாராளவாதச் சார்புள்ள இணையத் தளங்களுடனான அதன் மோதல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தப் பிரிவினரிடையே பிரபலமான ஜிஹூ என்ற இணைய விவாதத் தளத்தில், 2017-இல் “சீன வரலாற்றில் மிகச் சிறந்த மனிதர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மிக விரைவில் மாவோவை முன்னிறுத்தும் பதில்கள் பெருகின.

ஆனால், கீழிருந்து எழுந்த இந்த மாவோ ஆதரவு அந்தத் தளத்தின் உரிமையாளர்களுடன் நேரடியாக மோதியது. அதன் நிறுவனர்கள் சீனாவின் தாராளவாத ஊடக வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள்; 1980-களிலிருந்து நாட்டின் அறிவுசார் வெளியில் ஆதிக்கம் செலுத்திய சந்தை ஆதரவு, மேற்கத்திய ஆதரவு, உறுதியான மாவோ எதிர்ப்புப் பார்வைகளைக் கொண்ட அறிவுசார் மேல்தட்டினரின் பிரதிநிதிகள். இந்தப் போக்கை அவர்கள் ஊக்குவிக்கவில்லை. மாறாக, அதிக ஆதரவு பெற்ற பல பதில்களை அழித்தனர்; இறுதியில் அந்தக் கேள்வித் தொடரையே முழுவதுமாக மூடினர்.

கீழிருந்து ஆதரவு பெருகுவதும், அதைத் தொடர்ந்து தள நிர்வாகம் அதை ஒடுக்குவதுமான இந்த முறை, “மாவோ காய்ச்சல்” மேலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல; அரசின் வழிநடத்தலிலிருந்து சுயாதீனமாக உருவாகி நீடித்துவரும் ஓர் இயக்கம் என்பதைக் காட்டுகிறது.

1990-களின் பரவலான விமர்சனத்திலிருந்து, 2000-களின் அமைதியான மறுமதிப்பீட்டிற்கும், அங்கிருந்து 2020-களின் தீவிரமான வாசிப்பிற்கும் வந்துள்ள இந்தப் பயணம், ஆழமான கருத்தியல் மாற்றத்தைக் குறிக்கிறது.

தொடரும்…

யின்ஹாவ் ஜாங்
மந்த்லி ரிவியூ, தொகுதி 77, எண் 11, ஏப்ரல் 2026.

(யின்ஹாவ் ஜாங், அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுகள் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மார்க்சியக் கோட்பாடு மற்றும் சீனப் புரட்சியின் வரலாறு குறித்து பிரபலமான சமூக ஊடகக் கணக்கொன்றையும் நடத்தி வருகிறார்.)

நன்றி: மந்த்லி ரிவியூ

குறிப்புகள்:

  1. வர்க்க அடிப்படையில் மாவோ மற்றும் பண்பாட்டுப் புரட்சி குறித்த அணுகுமுறைகள் எவ்வாறு வேறுபட்டிருந்தன என்பதற்கான விரிவான ஆய்வுக்கு: Mobo C. F. Gao, The Battle for China’s Past: Mao and the Cultural Revolution [“சீனாவின் கடந்தகாலத்திற்கான போராட்டம்: மாவோவும் பண்பாட்டுப் புரட்சியும்”] (London: Pluto Press, 2008). இந்தப் பிளவை 2000-இல் ஹெனான் மாகாணத்தின் ஒரு நகரத்தில் நடத்தப்பட்ட சமூகவியல் ஆய்வு மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது. “முதலில் சிலர் பணக்காரர்களாகட்டும்” என்ற சீர்திருத்தக் கொள்கை இறுதியில் அனைவருக்கும் பொதுச் செழிப்பைத் தரும் என்ற வாக்குறுதியை 85 விழுக்காட்டினர் நம்பவில்லை; மாறாக அது பணக்காரர்–ஏழை இடைவெளியை மேலும் பெருக்கும் என்றனர். அதே நேரத்தில் பண்பாட்டுப் புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பூஜ்ஜியம் விழுக்காடு. பார்க்க: Sun Liping, Imbalance: The Logic of a Fractured Society [“சமநிலையின்மை: பிளவுபட்ட சமூகத்தின் தர்க்கம்”] (Beijing: Social Sciences Academic Press, 2004), 66.
  2. Wei Bing, “What Do You Think of Mao?,” China Focus 2, no. 1 (1994): 3; மேற்கோள்: Mobo Gao, “Mao’s Spectre Still Haunts Mainland China: China’s Economic Reforms and Chinese Attitudes After Mao’s Death,” Hong Kong Journal of Social Sciences, no. 7 (Spring 1996): 140–58.
  3. Li Yexing, “A Survey on University Students’ Understanding and Evaluation of the ‘Cultural Revolution,’” China News Digest Supplement, no. 475 (April 22, 2008).
  4. சிங்குவா பல்கலைக்கழகம் தனது வருடாந்திர நூலக இரவல் பட்டியலை அதிகாரபூர்வ WeChat பொதுக் கணக்கில் வெளியிடுகிறது. 2019 தரவுக்கு: Tsinghua University, “Tsinghua University Library’s 2019 Loan Ranking Is Here!,” WeChat, January 10, 2020.
  5. MyCOS Institute, “We Analyzed Big Data from 80 University Libraries and Found This Book Is the Most Popular,” Sohu, February 19, 2021.
  6. பெய்ஹாங் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வக் கணக்கில் வெளியான அசல்
  7. காணொளி இன்னும் கிடைக்கிறது: Beihang University, “Beihang Library’s 2020 Annual Loan Ranking,” Douyin, May 15, 2021. சமீபத்திய 2024 அறிக்கையிலும் Selected Works மற்றும் அதன் ஐந்தாம் தொகுதி முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ந்தன. பார்க்க: Beihang University Library, “Data Talks 2024: Beihang Library Annual Reading Report,” WeChat, May 13, 2024.

மொழிபெயர்ப்பு: தமிழ்ச்சுடர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க