தோழர்களே! நாம் நமது பணிகளையும் அவற்றை நிறைவேற்றுவதற்கான கொள்கைகளையும் இப்போது புரிந்து கொண்டுள்ளோம் என்பதால் இந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதிலும் இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்துவதிலும் நமது கண்ணோட்டம் என்னவாக இருக்க வேண்டும்?
தற்போதைய சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைமை நமக்கும் ஒட்டுமொத்தமாக சீன மக்களுக்கும் பிரகாசமான வாய்ப்புகளை முன்வைக்கிறது; முன்னெப்போதும் கண்டிராத சாதகமான நிலைமைகளை அளிக்கிறது. இது வெளிப்படையானது. சந்தேகத்திற்கிடமற்றது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் கடுமையான சிரமங்கள் உள்ளன. பிரகாசமான பக்கத்தை மட்டும் பார்த்து சிரமங்களைப் பார்க்காத யாரொருவரும் கட்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு சக்தி வாய்ந்த முறையில் போராட முடியாது.
சீன மக்களுடன் ஒன்றிணைந்து நமது கட்சி, ஜப்பானுக்கு எதிரான எதிர்ப்பு யுத்தம் நடந்த எட்டு ஆண்டுகள் உட்பட கட்சி வரலாற்றின் இருபத்து நான்கு ஆண்டுகளில் சீன தேசத்துக்கு அளவிடற்கரிய பலத்தை சேர்த்துள்ளது; நமது பணியின் வெற்றி தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் நமது பணியில் குறைகள் இருக்கின்றன. வெற்றியின் பக்கத்தை மட்டும் பார்த்து குறைகளின் பக்கத்தை பார்க்காத யாரொருவர் அதேபோல் கட்சிப் பணிகளை நிறைவேற்ற சக்தி வாய்ந்த முறையில் போராட முடியாது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி 1921ல் அது பிறந்தது முதற்கொண்டு இருபத்து நான்கு ஆண்டுகளில் மூன்று மாபெரும் போராட்டங்கள் வடக்கு படையெடுப்பு, விவசாயப் புரட்சிப்போர் இன்னும் நடந்துகொண்டிருக்கிற ஜப்பானிய எதிர்ப்புப் போர் – வழியே சென்றுள்ளது. ஏனெனில், தொடக்கத்திலிருந்தே நமது கட்சி மார்க்சிய-லெனினிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது; ஏனெனில், மார்க்சிய-லெனினியமே உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிக மிக சரியான மற்றும் மிக மிக புரட்சிகரமான விஞ்ஞான சிந்தனையின் ஒட்டுமொத்த உருவமாக உள்ளது. மார்க்சிய-லெனினிய உலகளாவிய உண்மை சீனப் புரட்சியின் ஸ்தூலமான நடைமுறையுடன் ஒன்றுபடத் தொடங்கியபோது சீனப்புரட்சி முற்றிலும் புதியதொரு வண்ணத்தைப் பெற்றது; புதிய ஜனநாயகத்தின் முழு வரலாற்றுக் கட்டம் தோன்றியது. மார்க்சிய-லெனினிய தத்துவத்தை ஆயுதமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன மக்களுக்கு ஒரு புதிய வேலைப் பாணியை, அதாவது, நடைமுறையுடன் தத்துவத்தை அவசியமாக ஒன்றிணைக்கக்கூடிய, வெகுஜனங்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய, சுயவிமர்சனத்தை கையாளக் கூடிய ஒரு புதிய வேலைப் பாணியை கொண்டுவந்துள்ளது.
உலகம் முழுமையும் பாட்டாளி வர்க்க போராட்டத்தின் நடைமுறையை பிரதிபலிக்கின்ற இந்த மார்க்சிய-லெனினிய சர்வ வியாபக உண்மை, சீனப் பாட்டாளி வர்க்கம் மற்றும் மக்களது புரட்சிகரப் போராட்டத்தின் ஸ்தூலமான நடைமுறையுடன் இணைக்கப்படும்போது சீன மக்களின் வெல்லப்பட முடியாத ஆயுதமாக ஆகின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இதை சாதித்துள்ளது. இந்த கோட்பாட்டுக்கு எதிரான வரட்டுவாதம் மற்றும் அனுபவ வாதத்தின் ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் எதிரான உறுதியான போராட்டத்தினூடே நமது கட்சி வளர்ந்து முன்னேறியுள்ளது. சர்வ வியாபக உண்மை என அனுபவவாதம் அரைகுறை அனுபவத்தை தவறாகக் கொள்கின்ற அதே சமயத்தில் வரட்டுவாதம் ஸ்தூலமான நடைமுறையிலிருந்து பிரிந்து விடுகிறது. இரண்டு வகைப்பட்ட சந்தர்ப்பவாத சிந்தனைகளுமே மார்க்சியத்துக்கு எதிராக உள்ளன. நமது கட்சி தனது இருபத்து நான்கு ஆண்டு போராட்டக் காலத்தில் இத்தகைய தவறான சிந்தனையை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியுள்ளது; அது இன்னும் அவ்வாறு செய்துவருகிறது; இவ்வாறாக அது தன்னைத்தானே தத்துவரீதியாக பெரிதும் உறுதிபடுத்திக் கொண்டுள்ளது. நமது கட்சி இப்போது 12,10,000 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. எதிர்ப்பு யுத்தத்தின்போது மிகப் பெரும்பான்மையோர் சேர்ந்தனர்; அவர்களது தத்துவத்தில் பல்வேறு குறைகள் உள்ளன; போருக்கு முன்பு கட்சியில் சேர்ந்த உறுப்பினர்களில் சிலருக்கும் இதுவே பொருந்தும். கடந்த சில ஆண்டுகளாக குறைகளைப் போக்கும் இந்தப் பணி வெற்றிகரமாக இருந்துள்ளது; இந்தக் குறைகளைப் போக்குவதை நோக்கி வெகுதொலைவு சென்றுள்ளது. இந்தப்பணி தொடரப்பட வேண்டும்; “எதிர்காலத் தவறுகளைத் தவிர்ப்பதற்கு கடந்தகால தவறுகளிலிருந்து படிப்பினைப் பெறுதல்” “நோயாளியைப் பாதுகாப்பதற்கு நோயைக் குணப்படுத்துதல்” என்ற உணர்வில் இன்னும் விரிவான அளவில் கட்சிக்குள் தத்துவார்த்தப்பணி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு நமது கட்சியை மற்றெல்லா கட்சியிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்ற ஓர் அடையாளச் சின்னமாகும் என்பதை எல்லா மட்டத்திலும் உள்ள முன்னணி கட்சி ஊழியர்கள் புரிந்து கொள்ளுமாறு நாம் செய்ய வேண்டும். எனவே, மாபெரும் அரசியல் போராட்டத்துக்காக கட்சி முழுவதையும் ஐக்கியப் படுத்துவதில் பற்றிக்கொள்ள வேண்டிய மையமான கண்ணி தத்துவார்த்தக் கல்விதான். இது செய்யப்படாவிட்டால் கட்சி தனது அரசியல் பணிகளில் எதையும் நிறைவேற்ற முடியாது.
நமது அரசியல் கட்சியை இதர அரசியல் கட்சிகளிலிருந்து பிரித்துக் காட்டும் இன்னொரு அடையாளச் சின்னம் யாதெனில் பரந்துபட்ட வெகுஜனங்களுடன் நாம் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளோம் என்பதாகும். நமது தொடக்கப் புள்ளியே மக்களுக்கு மனப்பூர்வமாக சேவை செய்வதும், ஒரு கணமும் ஒருபோதும் மக்களிடமிருந்து நம்மை நாம் பிரித்துக் கொள்ளாதிருப்பதும், எல்லா விஷயங்களிலும் தனி நபர்கள் அல்லது தனிப் பிரிவுகளின் நலன்களிலிருந்து அல்லாமல் மக்களின் நலன்களிலிருந்து தொடங்குவதும், மக்களுக்கான நமது பொறுப்பின் அடையாளத்தைப் புரிந்து கொள்வதும், முன்னணி கட்சி அமைப்புகளுக்கான நமது பொறுப்பின் அடையாளத்தைப் புரிந்து கொள்வதுமாகும். கம்யூனிஸ்டுகள் எப்போதுமே உண்மையின் பக்கம் நிற்கத் தயாராயிருக்க வேண்டும்; ஏனெனில் மக்களது நலன்களில் உண்மை இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் எந்நேரமும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள தயாராகயிருக்க வேண்டும்; ஏனெனில் தவறுகள் மக்களின் நலன்களுக்கு எதிராக உள்ளன. இருபத்து நான்கு ஆண்டு கால அனுபவம் நமக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் இடத்தில் சரியான பணி, கொள்கை மற்றும் வேலைமுறை மக்களது தேவைகளுக்கு பொருத்தமானவையாக உள்ளன என்பதும், மக்களுடனான நமது பிணைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றன என்பதும், ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் இடத்தில் தவறான பணி, கொள்கை மற்றும் வேலைமுறை மக்களது தேவைகளுக்கு பொருத்தமற்றவையாக உள்ளன என்பதும் மக்களிடமிருந்து நம்மைப்பிரித்து விடுகிறது என்பதாகும். வரட்டுவாதம், அனுபவவாதம், கட்டளைவாதம், வால் பிடித்தல் வாதம், குறுங்குழுவாதம், அதிகாரத்துவம், பணியில் அகங்காரப் போக்கு போன்ற தீமைகள் நிச்சயம் தீங்கு பயப்பவையாகவும் சகித்துக் கொள்ள முடியாதவையாகவும் இருக்கக் காரணம் யாதெனில், இந்தத் தீமைகளால் தாக்கத்துள்ளான எவரும் அவற்றை விட்டொழிக்க வேண்டியதன் காரணம் யாதெனில், அவை நம்மை மக்களிடமிருந்து பிரித்து விடுகின்றன என்பதுதான். நமது மாநாடு நமது கட்சியை விழிப்புடனிருக்குமாறும், எந்தத் தோழர் எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அவர் மக்களிடமிருந்து பிரியாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ள வேணடும். ஒவ்வொரு தோழரும் மக்களை நேசிக்க வேண்டுமென்றும், மக்களின் குரலை கவனமாகக் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்றும் அவர் எங்கே சென்றாலும் மக்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு மேலாக தன்னை வைத்துக் கொள்ளாமல் அவர்களில் ஒருவனாக அவர்களுடன் ஒன்று கலந்துவிட வேண்டும் என்றும்; அவர்களது தற்போதைய மட்டத்துக்கு ஏற்ப அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும் என்றும்; அல்லது அவர்களது அரசியல் உணர்வை உயர்த்த வேண்டும் என்றும்; சுயமாக தாங்களே முன்வந்து தங்களைத் தாங்களே படிப்படியாக ஸ்தாபனமாக்கிக் கொள்ள அவர்களுக்கு உதவவேண்டும் என்றும்; குறிப்பிட்ட காலம் மற்றும் இடத்தில் உள் மற்றும் வெளி சூழ்நிலைமைகளால் அனுமதிக்கப்படுகின்ற அவசியமான போராட்டங்கள் அனைத்தையும் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் நமது மாநாடு போதிக்க வேண்டும். எந்த வகையான வேலையிலும் கட்டளைவாதம் தவறானதாகும்; ஏனெனில், வெகுஜனங்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மீறுவதிலும் மக்களின் சுயமான நடவடிக்கைக் கோட்பாட்டை மீறுவதிலும் அது அவசர நோயை பிரதிபலிக்கிறது. நமது தோழர்கள் தாங்கள் புரிந்து கொள்கின்ற ஒவ்வொன்றும் மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது என நினைத்துக் கொள்ளக் கூடாது. வெகுஜனங்கள் இதை புரிந்து கொள்கிறார்களா என்பதையும் நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருக்கிறார்களா என்பதையும் அவர்கள் மத்தியில் செல்வதன் மூலம் ஆய்வு செய்வதன் மூலமும்தான் கண்டுபிடிக்கப்பட முடியும். நாம் அவ்வாறு செய்தால் கட்டளைவாதத்தைத் தவிர்க்க முடியும். எந்த வகையான வேலையிலும் வால்பிடித்தல்வாதம் கூட தவறானதாகும். ஏனெனில், வெகுஜனங்களின் அரசியல் உணர்வு மட்டத்துக்குக் கீழே தாழ்ந்துபோவதிலும், வெகுஜனங்களை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் கோட்பாட்டை மீறுவதிலும் அது தாமத நோயை பிரதிபலிக்கிறது. நமது தோழர்கள் தாங்கள் இன்னும் புரிந்து கொள்ளாதிருக்கின்ற எதையும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைத்துக் கொள்ளக்கூடாது. மக்களின் தலைவர்களாக செயல்படுவதற்குப் பதிலாக குறிப்பிட்ட சில பிற்போக்கு சக்திகளின் பின்னால் இன்னும் வால்பிடித்துச் செல்பவர்களாக நமது தோழர்கள் இருக்கும்போது இப்படிப்பட்ட தோழர்கள் இந்தப் பிற்போக்கு சக்திகளின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றனர்; மேலும், அவர்களைப் பரந்துபட்ட வெகுஜனங்கள் என்று தவறாகக் கருதுகின்றனர் நம்மை மக்கள் மீறுவதும் ஒரு படி முன்னேறிச் செல்ல விரும்புவதும் அடிக்கடி நிகழ்கிறது. ஒரே வார்த்தையில் சொன்னால், ஒரு கம்யூனிஸ்ட்டினுடைய சொல் மற்றும் செயலுக்கான உச்சபட்ச சோதனை யாதெனில் மிகப் பெரும்பான்மையான மக்களின் உயர்ந்தபட்ச நலன்களுக்குப் பொருத்தமானதாகவும், மிகப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றதாகவும் இருக்கவேண்டும் என்பதே. மக்களை நாம் சார்ந்திருக்கின்ற வரை, மக்களின் வற்றாத ஆக்கரீதியான சக்தியை உறுதியாக நம்பியிருக்கின்ற வரை. எனவே, மக்களிடம் நம்பிக்கைக் கொண்டு அவர்களுடன் கலந்திருக்கும் வரை, எதிரி யாரும் நம்மை அழிக்க முடியாது என்பதையும், அதேசமயம் நாம் ஒவ்வொரு எதிரியையும் நசுக்கவும் ஒவ்வொரு சிரமத்தையும் கடந்துவரவும் முடியும் என்பதையும் புரிந்துகொள்ள ஒவ்வொரு தோழருக்கும் உதவவேண்டும்.
மனசாட்சிப்படியான சுயவிமர்சன நடைமுறை நமது கட்சியை மற்றெல்லா அரசியல் கட்சியிலிருந்தும் பிரித்துக் காட்டும் முக்கிய அடையாளச் சின்னமாக இன்னமும் திகழ்கிறது. நாம் கூறுவது போல, ஒரு அறை தினம் சுத்தப்படுத்தப் படவில்லையென்றால் தூசி குவிந்துவிடும்; நமது முகம் தினம் கழுவப்படவில்லையென்றால் அழுக்காகிவிடும்; தோழர்களின் மூளையிலும் கட்சிப் பணியிலும் கூட தூசி படிந்து விடுகிறது; அவற்றையும்கூட பெருக்கிக் கூட்டவும் கழுவவும் வேண்டியுள்ளது. “ஓடும் நீர் ஊசிப் போகாது, கதவுப் பிணைப்பை செல்லரிக்காது” என்ற பழமொழியின் அர்த்தம் இடையறாத இயக்கம் கிருமிகள் மற்றும் இதர ஜீவன்கள் எதுவும் உட்புகுவதை தடுக்கிறது என்பதாகும். நமது வேலையை முறையாக சரிபார்ப்பதும் அவ்வாறு செய்வதில் ஒரு ஜனநாயக வேலைப் பாணியை விருத்தி செய்து கொள்வதும் விமர்சனத்திற்கோ சுய விமர்சனத்திற்கோ அஞ்சாதிருப்பதும், “உனக்கு தெரிந்த தனைத்தும் ஒளிக்காமல் கூறு”, “பேசுபவரை பழிக்காதே, மாறாக அவரது வார்த்தைகளால் எச்சரிக்கை அடை”, “தவறுகளைச் செய்திருந்தால் அவற்றைத் திருத்து, செய்யவில்லையென்றால் அவை வராமல் பாதுகாத்துக் கொள்” என்பன போன்ற பிரபல சீன முதுமொழிகளைக் கடைபிடிப்பதும் ஆகிய இவை மட்டுமே நமது தோழர்களின் மனங்களையும் நமது கட்சியின் உடலையும் எல்லாவிதமான அரசியல் தூசும் அசுத்தப்படுத்தாதபடி தடுப்பதற்கான பயனுள்ள வழியாகும். சரி செய்யும் இயக்கம் பெரும் பயனுடையதாக இருந்ததற்குக் காரணம், “எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்கு கடந்த கால தவறுகளிலிருந்து படிப்பினையைப் பெறுவது, நோயாளளியைக் காப்பதற்கு நோயைக் குணப்படுத்துவது” என்ற நோக்கம், நாம் கடைபிடிக்க விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் நேர்மையாகவும், மனசாட்சிப்படியும் இருந்தன; ஒப்புக்கானதாகவோ திரிக்கப்பட்டதாகவோ இல்லை என்பது தான்.
மிகப் பரந்துபட்ட சீன மக்களின் உயர்ந்த நலன்களின் மீது தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டவர்களும், நமது லட்சியத்தின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களுமான சீன கம்யூனிஸ்டுகளாகிய நாம் எந்த ஒரு தனிப்பட்ட தியாகத்திற்கும் ஒரு போதும் அஞ்சுவதில்லை; லட்சியத்துக்காக நமது உயிரைக் கொடுக்க எந்த நேரமும் தயாராக இருக்கிறோம்; அப்படிப்பட்ட நாம் மக்களின் தேவைகளுக்கு பொருத்தமல்லாத எந்த ஒரு கருத்தையோ, நோக்கத்தையோ, அபிப்பிராயத்தையோ, அல்லது வழிமுறையையோ வெறுத்து ஒதுக்க தயங்குபவர்களாக இருக்க முடியுமா? அரசியல் தூசும், கிருமிகளும் நமது சுத்தமான முகத்தை அசுத்தப்படுத்தவோ அல்லது நமது ஆரோக்கியமான உடலை தின்று தீர்க்கவோ நாம் அனுமதிக்க விருப்பம் உடையவர்களாக இருக்க முடியுமா? எண்ணற்ற புரட்சிகர தியாகிகள் மக்களின் நலன்களுக்காக தங்கள் உயிர்களை ஈந்துள்ளனர். உயிருடன் உள்ள நாம் அவர்களை எண்ணும்போது நமது இதயங்கள் வேதனையால் நிறைகின்றன – அப்போது, நாம் தியாகம் செய்யமுடியாத தனிப்பட்ட நலன் எதுவுமோ நாம் கைவிட முடியாத தவறு எதுவுமோ இருக்க முடியுமா?
படிக்க: தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்
தோழர்களே! இம்மாநாடு முடிந்ததும் போர்முனைக்கு நாம் சென்று, இதன் தீர்மானங்களால் நாம் வழிகாட்டப்பட்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை இறுதியாக தோற்கடிப்பதற்கும் புதிய சீனா ஒன்றை உருவாக்குவதற்கும் போராடுவோம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக நாம் நாட்டு மக்கள் அனைவருடனும் ஒன்றுபடுவோம். மறுபடியும் கூறுகிறேன். ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதற்கும் புதிய சீனாவை கட்டியெழுப்புவதற்கும் ஆதரவாக இருக்கின்ற எந்தவொரு வர்க்கத்துடனும், எந்த ஒரு கட்சியுடனும், எந்தவொரு குழுவுடனும் அல்லது எந்த ஒரு தனி நபருடனும் நாம் ஒன்றிணைவோம். இந்த குறிக்கோளை அடைவதற்காக நாம் ஒன்றிணைவோம். இந்த குறிக்கோளை அடைவதற்காக நாம் நமது கட்சியின் சகல சக்திகளையும் ஜனநாயக மத்தியத்துவ ஸ்தாபன மற்றும் கட்டுப்பாடு கோட்பாடுகளின் அடிப்படையில் உறுதியாக ஐக்கியப்படுத்துவோம். கட்சியின் வேலைத் திட்டத்துக்கும் அமைப்பு விதிகளுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கின்ற எந்தவொரு தோழருடனும் நாம் ஐக்கியப்படுவோம் வடக்கு படையெடுப்புக் கால கட்டத்தில் 60,000-க்கும் குறைவான உறுப்பினர்களையே நமது கட்சி கொண்டிருந்தது; பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் எதிரியால் சிதறடிக்கப்பட்டனர்; விவசாயப் புரட்சிப் போர்க் கால கட்டத்தில் 3,00,000-க்கும் குறைவான உறுப்பினர்களையே நமது கட்சி கொண்டிருந்தது; அவர்களில் பெரும்பாலானோர் அதே போல் எதிரியால் சிதறடிக்கப்பட்டனர். இப்போது நாம் 12,00,000-க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டிருக்கிறோம்; இந்த நேரத்தில் நாம் எதிரியால் சிதறடிக்கப்படுவதற்கு நம்மை நாம் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது. இந்த மூன்று காலக்கட்டத்தின் அனுபவத்திலிருந்து நாம் பயன் பெறுவோமே யானால், நாம் அடக்கமானவர்களாகவும், கர்வத்துக்கு எதிரான பாதுகாவலர்களாகவும் இருப்போமே யானால் கட்சிக்குள் இருக்கின்ற அனைத்து தோழர்களுக்கிடையிலும் ஐக்கியத்தை பலப்படுத்தக்கூடியவர்களாகவும் கட்சிக்கு வெளியிலுள்ள அனைத்து மக்களுடனுமான ஐக்கியத்தை பலப்படுத்தக்கூடியவர்களாகவும் இருப்போமேயானால் நாம் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களையும் அவர்களது அடிமைத்தனம் மிக்க ஏவல்நாய்களையும் உறுதியாகவும் முற்றாகவும் அடியோடும் பூரணமாகவும் அழிந்தொழித்து அதன் பின்னர் புதிய ஜனநாயக சீனாவை கட்டியெழுப்புவதில் திடமாக இருக்கலாம்.
புரட்சியின் மூன்று கால கட்டங்களின் அனுபவம், குறிப்பாக ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் அனுபவம் நம்மையும் சீன மக்கள் அனைவரையும் திடமாக நம்ப வைத்துள்ளது என்னவெனில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிகள் இல்லாமல், சீன மக்களின் முக்கிய ஆதாரமாக சீனக் கம்யூனிஸ்ட்கள் இல்லாமல் சீனா ஒரு போதும் சுதந்திரத்தையோ அல்லது விடுதலையையோ அல்லது தொழில் மயத்தையோ தனது விவசாயத்தில் நவீன மயத்தையோ அடைய முடியாது என்பதாகும்.
தோழர்களே! மூன்று புரட்சிகளின் அனுபவத்தை ஆயுதமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் நாம் நமது மாபெரும் அரசியல் பணியை நிறைவேற்ற முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
ஆயிரமாயிரம் தியாகிகள் தங்களது உயிரை மக்களுக்காக வீரதீரத்துடன் அர்ப்பணித்துள்ளனர்; அவர்களது பதாகையை உயரப் பிடித்து அவர்களது இரத்தம் தோய்ந்த பாதை வழியே பீடு நடை போடுவோமாக!
ஒரு புதிய ஜனநாயக சீனா விரைவில் உதிக்கும். அந்த மகத்தான நாளை நாம் வாழ்த்துவோமாக!
(தோழர் மா சேதுங்கின் “கூட்டரசாங்கம் பற்றி” என்ற நூலிலிருந்து…)
குறிப்பு: சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறிய கம்யூனிஸ்ட் கட்சியும், நாடும் ஜப்பானிய ஆக்கிரமிப்பை சந்தித்தது. அந்த இடைக்கட்டத்தில் கோமிண்டாங்கிடமிருந்தும், நிலப்பிரபுக்களிடமிருந்தும் சீனாவை மீட்பதைவிட, பாசிச ஜப்பானிடமிருந்து சீனாவைக் காப்பது முதன்மை பிரச்சினையாக மாறியது. இதற்காக நேற்று வரை போரிட்டவர்களுடனும், விலகி நின்றவர்களுடனும் இணைந்து ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டிய தேவை முன்னுக்கு வந்தது. பொது எதிரிக்கு எதிராக பல்வேறு வர்க்கங்களையும் ஒன்றுபடுத்துவதும் அவசியமானது. நாட்டின் நிலைமையை மார்க்சிய – லெனினிய ஆய்வுக்குட்படுத்தி ஆசான் மாவோ குறித்த திட்டத்தை வகுத்து முன்வைத்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது தேசிய மாநாட்டிற்கு தொகுத்து முன்வைத்த அந்த அரசியல் அறிக்கைதான் “கூட்டரசாங்கம் பற்றி” நூலாகும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











