6.15 கோடி வாக்காளர்களை நீக்கிய எஸ்.ஐ.ஆர். 3.0 பயங்கரவாதம்

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாகாலாந்து, திரிபுரா தவிர மற்ற 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 6.15 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

0

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எனும் பாசிச நடவடிக்கையை மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தி வருகிறது. அவை, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தராகண்ட், ஆந்திரப்பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், நாகாலாந்து, திரிபுரா, டெல்லி, சண்டிகர், தாத்ரா, நகர் ஹவேலி, டாமன், டையூ ஆகியனவாகும்.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாகாலாந்து, திரிபுரா தவிர மற்ற 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 6.15 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்-க்கு முன்னர், வாக்காளர் பட்டியலில் 36.08 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், எஸ்.ஐ.ஆர்-க்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 29.93 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது 6.15 வாக்காளர்கள் (17.04 சதவிகிதம்) வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக, டெல்லியில் 47.56 லட்சம் பேர் (32.78 சதவிகிதம்), மகாராஷ்டிராவில் 2.06 கோடி பேர் (21.15 சதவிகிதம்), கர்நாடகாவில் 1,07 கோடி பேர் (19.47 சதவிகிதம்), தெலுங்கானாவில் 73.39 கோடி பேர் (21.69 சதவிகிதம்)நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆந்திரப்பிரதேசத்தில் 44.89 லட்சம், ஜார்க்கண்டில் 43.61 லட்சம், ஹரியானாவில் 33.83 லட்சம், பஞ்சாபில் 20.66 லட்சம், ஒடிசாவில் 20.12 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாக்காளர் நீக்கங்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் தேர்தல் வெற்றிக்கேற்பவே அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இஸ்லாமியர்கள், பெண்கள், ஏழை எளிய உழைக்கும் மக்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சான்றாக, உத்தராகண்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் அதிகளவிலான நீக்கங்கள் நடந்துள்ளதுடன், பெண்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 45 தொகுதிகளில் 2022 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட அதிகளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதைப்போல், டெல்லியிலும் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 68 தொகுதிகளில் 2025 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட அதிகளவிலான நீக்கங்கள் நடந்துள்ளன.

இந்த வாக்காளர் நீக்கங்கள் உத்தராகண்ட், பஞ்சாப், தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை குறிவைத்தே நடந்துள்ளன. மேலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி-அமித்ஷா கும்பலை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என்ற பாசிச நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.

குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். மூலம் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை மிகப்பெரும் அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, போலி வாக்காளர்களை சேர்த்து வாக்காளர் பட்டியலை காவிமயமாக்கியே பாசிச பா.ஜ.க. தனது தேர்தல் வெற்றியை சாத்தியமாக்கி வருகிறது. எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அனுபவமும் இதுவே ஆகும். அந்தவகையிலேயே எஸ்.ஐ.ஆர். 3.0-வும் அரங்கேறி வருகிறது.


படிக்க: உத்தராகண்டில் பா.ஜ.க. வெற்றிக்கு பாதையமைக்கும் எஸ்.ஐ.ஆர். 3.0


மேலும், எஸ்.ஐ.ஆர். என்பது கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதைத் தாண்டி குடியுரிமையைப் பறிப்பதற்கான பாசிச நடவடிக்கையும் ஆகும். மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவதும், அரசின் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதும் அதற்கான சான்றுகளாகும். இனி வருங்காலங்களில் இப்பாசிச நடவடிக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

மறுபுறம், தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், தொகுதி மறுவரையறை ஆகியவற்றின் வரிசையில் எஸ்.ஐ.ஆர். மூலமும், பெயரளவிலான தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிட்டு வருகிறது பாசிச கும்பல்.

இத்தகைய பேரபாயமிக்க பாசிச நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பெயரளவிலான எதிர்ப்புடன் தங்களை வரம்பிட்டுக் கொள்கின்றன. மேலும், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அதிகார வர்க்க்த்தின் துணையுடனே எஸ்.ஐ.ஆர்-ஐ பாசிச கும்பல் நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது.

ஆகவே, மோடி அரசைப் பணிய வைத்த நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தைப் போன்று நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டத்தைக் கட்டியமைப்பதன் மூலமே எஸ்.ஐ.ஆர்-ஐ தடுத்து நிறுத்த முடியும். அப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது பாசிச எதிர்ப்பு புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க