நான்கு மாவட்டங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளைகள் உதயம்!

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், நில உரிமை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைக் கோரியும், சரியான மாற்றை முன்வைத்து பாசிசத்திற்கு எதிராகவும் மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ச்சியாகக் களமிறங்கி வருகிறது. இதன் விளைவாக, சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் கழகத்தின் புதிய கிளைகள் உதயமாகியுள்ளன.

மக்கள் அதிகாரக் கழகத்தின் கோத்தகிரி அம்பாள் நகர் கிளை.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், நில உரிமை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைக் கோரியும், சரியான மாற்றை முன்வைத்து பாசிசத்திற்கு எதிராகவும் மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ச்சியாகக் களமிறங்கி வருகிறது. இதன் விளைவாக, சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளைகள் தொடங்கப்பட்டு, அமைப்புப் பணிகள் வீச்சுடன் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி – விட்டிலாபுரம் கிளை

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம், விட்டிலாபுரம் கிராமத்தில் உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காகவும், சாதியத் தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ந்து களமிறங்கி வருகிறது.

குறிப்பாக, கவின் ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலைத் தடை செய்யக் கோரியும் கழகத் தோழர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இப்பிரச்சாரத்தைக் கண்டு “ஆதிக்கச் சாதி” பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் பலர், தாங்களாகவே தோழர்களைத் தொடர்புகொண்டு கழகத்தில் இணைந்தனர். இதன் தொடர்ச்சியாக விட்டிலாபுரம் கிளை மே 10-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

புதிய கிளைத் தோழர்கள் குளம் ஆக்கிரமிப்பு, மின்கம்ப வசதி போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடி வந்தனர். அமைப்பின் வளர்ச்சியைச் சகிக்காத சிலரின் தூண்டுதலால், 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி பேச்சிமுத்து (எ) சின்னபாயாசம் என்பவன், கழகத் தோழர் கொம்பையாவை வெட்டத் துரத்தியதுடன் கிளைச் செயலாளர் தோழர் ஆறுமுகத்தையும் தாக்கினான்.

காயமடைந்த தோழர் ஆறுமுகம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்துத் தோழர்கள் மக்கள் ஆதரவோடு போலீசுநிலையத்தில் புகாரளித்து, ரவுடியை கைது செய்யக் கோரி பகுதி முழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தனர்.

சொந்த சாதி உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் எந்தச் சாதி சங்கத் தலைவரும் தட்டிக் கேட்க வராத நிலையில், மக்கள் அதிகாரக் கழகமே துணையாக நின்றது என்பதை மக்கள் உணர்ந்தனர். இதனால் ரவுடி பேச்சிமுத்துவின் மீதான அச்சத்தைக் கடந்து, சாதிய எல்லைகளைத் தாண்டி விட்டிலாபுரம் மக்கள் தோழர்களுக்கு ஆதரவாகத் திரண்டு வருகின்றனர்.

மதுரை கிழக்கு – தட்டான்குளம் கிளை

மதுரை கிழக்கு மாவட்டம் தட்டான்குளத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 40 குடும்பங்களுக்குப் பொதுப்பணித் துறை சார்பில் வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரப் பட்டா கோரிப் போராடும் இம்மக்களுக்கு மின்சாரம், ரேசன் கார்டு, குடிநீர் வசதிகள் இருந்தும் பட்டா மறுக்கப்பட்டு வந்தது.

கல்குவாரியை எதிர்த்துப் போராடிவரும் தோழர் ஞானசேகர் அளித்த தகவலின் பேரில், மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் அங்குச் சென்று நிலவரத்தைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, மக்களைத் திரட்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு அளித்தல், “வினவு” இணையதளத்தில் ஆவணப்படம் வெளியிடுதல், நிலத்தின் தன்மையை அறிய ஆர்.டி.ஐ. தாக்கல் செய்தல் மற்றும் வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்துதல் எனத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல் ஆகிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

கழகத்தின் தொடர் போராட்டங்கள், ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையப் போராட்டம், மே தின மற்றும் மைய இயக்க பரப்புரைகள் ஆகியவற்றைக் கவனித்து வந்த தட்டான்குளம் இளைஞர்கள், அமைப்பாகத் திரள்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜூன் 20 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் தட்டான்குளம் கிளை உதயமானது. கிளைச் செயலாளராகத் தோழர் விக்னேஷ்வரனும், பொருளாளராகத் தோழர் சண்முகமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிவகங்கை – புலியடிதம்மம் கிளை

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம், புலியடிதம்மத்தில் ஜூலை 12-ஆம் தேதி மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளை உதயமானது.

20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் கொண்ட தோழர் தனசேகரன் மற்றும் அப்பகுதி தோழர்கள், முன்னதாக நவீன கலைப்புவாதிகள் (மக்கள் அதிகாரம்) மற்றும் நவீன அராஜகவாதக் கும்பலுடன் (புரட்சிகர மக்கள் அதிகாரம்) இணைந்து செயல்பட்டனர்.

இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்தது, மக்கள் விரோதச் செயல்பாடுகள் குறித்துப் பேசாதது, அதிகாரத்துவப் போக்கு மற்றும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திட்டமில்லாத செயல்பாடுகள் காரணமாக, அவ்வமைப்புகளில் இருந்து தோழர்கள் விலகினர்.

கடந்த மே – ஜூன் மாதங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் செயல்பாடுகளைக் கவனித்து வந்த தோழர்கள், கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கழக இணைச் செயலாளர் தோழர் ரவி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், புலியடிதம்மத்தில் புதிய கிளை உருவாக்கப்பட்டது. இக்கிளையின் செயலாளராகத் தோழர் தனசேகரனும், பொருளாளராகத் தோழர் நாகராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக இணைந்த தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த கழக இணைச் செயலாளர் தோழர் ரவி, பகுதிப் பிரச்சினைகள் குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் விவாதித்தார். மக்களுடன் களத்தில் நின்று உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம் எனப் புதிய உறுப்பினர்கள் உறுதியேற்றனர்.

நீலகிரி – கோத்தகிரி அம்பாள் நகர் கிளை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள அம்பாள் நகர் கிராம மக்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதிக்காகப் போராடி வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு கூட காட்டுவழியே சுற்றி வர வேண்டிய நிலையிலிருந்த அப்பகுதி மக்கள், மக்கள் அதிகாரக் கழகத்தைத் தொடர்பு கொண்டனர்.

2025 ஜூன் மாதத்தில் நேரடியாகச் சென்று களநிலவரம் அறிந்த கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன், இது குறித்த காணொளியை வெளியிடவே அரசு அதிகாரிகளும் போலீசும் “மக்கள் அதிகாரக் கழகம் கட்சியை இப்பிரச்சினையில் ஈடுபடுத்த வேண்டாம். நாங்கள் செய்து தருகிறோம்” என்று மக்களிடம் நயவஞ்சகமாகப் பேசினர். மேலும் கழகத்தைப் பற்றி அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டினர்.

இருப்பினும், அரசின் அவதூறுகளைப் பொருட்படுத்தாத மக்கள், கழகத்துடன் இணைந்து துண்டறிக்கை பிரச்சாரம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் உள்ளிட்ட அடுத்தகட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், அமைப்பாகத் திரண்டு போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பதை உணர்ந்து மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைய முன்வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜூலை 19 அன்று கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் கோத்தகிரி கிளை உதயமானது. இக்கிளையின் செயலாளராகத் தோழர் சண்முகமும், இணைச் செயலாளராகத் தோழர் ராஜும், பொருளாளராகத் தோழர் சந்திரசேகரும் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மறைந்த புரட்சியாளர் தோழர் கதிரவனுக்குச் செவ்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் நடைபெற்றது.

மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321 

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க