கடன் தள்ளுபடி ஒரு தொடக்கமே… கார்ப்பரேட் ஆதிக்கத்தை வீழ்த்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்!

கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் கூட அடுத்த சில பருவங்களிலேயே விவசாயி மீண்டும் அதே கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் நீடிக்கவே செய்கிறது. விவசாயிகளை மீண்டும் மீண்டும் கடனாளியாக்கும் இந்த நச்சுப் பொருளாதார சூழலையே முழுமையாக மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.

0

விவசாயக் கடன் தள்ளுபடி போராட்டம் – பகுதி 7

பழைய கடனைத் தள்ளுபடி செய்வது, கடன் நிவாரணத் தீர்ப்பாயம் அமைப்பது, அடுத்த சாகுபடிக்குத் தேவையான கடன், தண்ணீர், மின்சாரம், பயிரிழப்புக்கான நிவாரணம் ஆகியவற்றை உடனடியாக உறுதி செய்வது ஏன் அவசியம் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இவை இல்லாமல், இன்றைய நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயி மீண்டும் எழுந்து நிற்க முடியாது. ஆனால், கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் கூட அடுத்த சில பருவங்களிலேயே விவசாயி மீண்டும் அதே கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் நீடிக்கவே செய்கிறது. விவசாயிகளை மீண்டும் மீண்டும் கடனாளியாக்கும் இந்த நச்சுப் பொருளாதார சூழலையே முழுமையாக மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.

சாகுபடிக்காக கடன் வாங்கும் அவலநிலை இல்லாதொழிய வேண்டும்; ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் குடும்பத்தை நடத்தப் பணம் மிஞ்ச வேண்டும்; அடுத்த பருவத்தைத் தொடங்க நகையை அடகு வைக்கவோ, கந்துவட்டிக்காரனிடம் செல்லவோ வேண்டியிருக்கக் கூடாது. விவசாயம் செய்தால் வாழ முடியும் என்ற குறைந்தபட்சப் பாதுகாப்பு இருக்க வேண்டும். தரமான விதை, உரம், வேளாண் ஆலோசனை, மண்–நீர் பரிசோதனை, பயிர் – நோய்க் கண்காணிப்பு, கால்நடை மருத்துவம் ஆகியவற்றை விவசாயி தனியாரிடம் அதிகப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கக் கூடாது. இவற்றைப் பொதுச் சேவையாக வலுப்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லிகளையும் இரசாயன உரங்களையும் விற்பவர்களே, விவசாயிகளுக்கு ஆலோசனை கூறும் நிலையை மாற்றாமல் விவசாயியின் செலவைக் கட்டுப்படுத்த முடியாது.

பாசனத்திலும் இதே நிலைதான். பொதுப்பாசனம் சீரழிந்ததால் ஆழ்துளைக் கிணறு, மோட்டார், குழாய் எனப் பல லட்ச ரூபாயை ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாகச் செலவிட வேண்டியிருக்கிறது. கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் வருமானம் கையில் நிற்காது; கடன் மட்டுமே மிச்சமிருக்கும். ஏரி, குளம், கால்வாய், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மீட்டுப் பராமரித்துக் கடைமடைவரை தண்ணீர் சென்றடையச் செய்வதைப் பொதுப் பொறுப்பாக மாற்ற வேண்டும்.

வறட்சி, வெள்ளம், புயல், பூச்சித் தாக்குதல் ஆகியவற்றால் ஒரு குடும்பம் பல ஆண்டுகளுக்குக் கடனாளியாக்கப்படும் நிலையை முற்றாக ஒழிக்க வேண்டும். பயிரிழப்பின் நட்டத்தைத் தனிப்பட்ட விவசாயக் குடும்பத்தின் தலையில் கட்டிவிடாமல், சமூகமே பகிர்ந்து ஏற்கும் பொதுப் பாதுகாப்பாக மாற்ற வேண்டும்.

பயிரின் முழுமையான உற்பத்திச் செலவுக்கேற்ற விலை நிர்ணயிக்கப்பட்டாலும், அந்த விலையில் விளைபொருளை வாங்கும் கட்டமைப்பு இல்லையென்றால் விவசாயி மீண்டும் தனியார் வியாபாரியின் கைகளில்தான் சிக்குவார். அதனால், உரிய விலையுடன் அரசுக் கொள்முதல், சேகரிப்பு, கிடங்கு, குளிர்பதனம், பதப்படுத்தல், போக்குவரத்து ஆகிய அனைத்தையும் ஒரே முழுமையான கட்டமைப்பாக உருவாக்க வேண்டும். இத்துறையில் பெருகி வரும் கார்ப்பரேட் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.

அறுவடை நேரத்தில் மலிவு விலையில் விளைபொருளை இறக்குமதி செய்வதையும், நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்போது ஏற்றுமதிக்குத் திடீரென்று தடை விதிப்பதையும் செய்து வரும் அரசுகளின் கொள்கைகள் சாதாரண நிர்வாகப் பிழைகள் அல்ல. இவை உலக வர்த்தக அமைப்பின் கட்டளைகளுக்குப் பணிந்து, விவசாயிகளை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்குப் பலியிடும் புதிய தாராளவாத, மறுகாலனியாக்கக் கொள்கைகளே ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கேற்ப இந்த முடிவுகள் மாற்றப்படுவதை அடியோடு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

கார்ப்பரேட் கைகளுக்குச் செல்லும் கூட்டுறவுகள்:
மீட்பது எப்படி
?

உழவு இயந்திரங்கள், விதைச் சேமிப்பு, பாசன வசதி, கிடங்கு, பதப்படுத்தல், போக்குவரத்து ஆகியவற்றை விவசாயிகள் கூட்டாகப் பயன்படுத்தும் அமைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த வசதிகளை அமைப்பதற்கான பெரும் செலவைப் பொதுநிதியைக் கொண்டு ஈடுசெய்ய வேண்டும். எந்த விவசாயிக்கு எந்த நேரத்தில் இயந்திரம் கிடைக்க வேண்டும், சேமிப்புக் கிடங்குகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை விவசாயிகளே கூடி முடிவு செய்ய வேண்டும்.

ஆனால், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டுறவுகளைப் பெரிய நிலவுடைமையாளர்களும் உள்ளூர் ஆதிக்கச் சக்திகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கூட்டுறவு, விவசாயிகளுக்குப் பதிலாகப் பெரிய நிறுவனங்களின் கொள்முதல் தரகராகவே செயல்படும்.

குத்தகை, கூலி – ஏழை விவசாயிகள்
நலன் காப்போம்!

பல கிராமங்களில் நிலத்தின் பட்டா ஒருவரிடம் இருக்கிறது; விதை வாங்கி, கூலி கொடுத்து, கடன் வாங்கிப் பயிரிடுபவர் இன்னொருவராக இருக்கிறார். விளைச்சல் பாதிக்கப்பட்டால் நட்டத்தைச் சுமப்பவர் குத்தகை விவசாயி. ஆனால் கடன், காப்பீடு, பயிரிழப்பு நிவாரணம் பெற வேண்டிய நேரத்தில் பட்டா இல்லை என்ற காரணத்தால் அவருடைய உரிமை மறுக்கப்படுகிறது. உண்மையில் சாகுபடி செய்பவர் யார் என்பதை அங்கீகரித்து, குத்தகை விவசாயிகளுக்குப் பாதுகாப்பான சாகுபடி உரிமையையும் நேரடிக் கடன், காப்பீடு, நிவாரணம் ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டும்.

அதேசமயம், ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட பெரும் நிலப்பரப்பைச் சிலர் வைத்திருக்க, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் நிலத்திற்காக ஏங்கும் நிலை மாற்றப்பட வேண்டும். “நிலம் உழுபவனுக்கே” என்ற கோரிக்கையின் அடிப்படையில் பெருநிலவுடைமையை ஒழித்தும், அரசு நிலங்களில் பொருத்தமானவற்றைப் பகிர்ந்து கொடுத்தும் நிலமற்றவர்களுக்கும் உழைக்கும் விவசாயிகளுக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும். நிலம் கிடைத்த பிறகும் நீர், கடன், இயந்திரம், நியாயமான விலை எதுவும் கிடைக்காவிட்டால் மீண்டும் கடனுக்காக அந்த நிலத்தை இழக்க நேரிடும். எனவே நிலப் பகிர்வையும் சாகுபடியைத் தொடருவதற்கான பொதுவசதிகளையும் ஒன்றாகவே நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிலத்தின் மீதான ஆதிக்கம் கிராமத்தில் வெறும் வருமானத்தை மட்டுமே தீர்மானிப்பதில்லை. யாருக்குத் தண்ணீர் கிடைக்கும், யார் கூட்டுறவில் முடிவு எடுப்பார், கூலியை யார் நிர்ணயிப்பார் என்பதிலும் நிலவுடைமையின் அதிகாரம் செயல்படுகிறது. பல இடங்களில் சாதி ஆதிக்கத்துடன் இந்த அதிகாரம் பின்னிப் பிணைந்திருக்கிறது. அதனால்தான் நில உரிமைக்கான போராட்டத்தைச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. விவசாயக் கமிட்டிகளுக்கு அதிகாரம் கொடுப்பதற்கு இதுவே காரணம்.

வயலில் ஆண்களுக்குச் சமமாக உழைக்கும் பெண்கள் பலர், நிலத்தின் பட்டா, கூட்டுறவு உறுப்பினர் உரிமை, வங்கிக் கடன், குடும்ப வருமானத்தின் பயன்பாடு ஆகியவற்றில் முடிவெடுக்கும் உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு உரிமையை மறுக்கும் ஆணாதிக்க நிலையை அடியோடு மாற்ற வேண்டும். பெண்களுக்குத் தனித்த அல்லது கூட்டு நிலவுரிமை, பாதுகாப்பான குத்தகை உரிமை, நேரடிக் கடன், காப்பீடு ஆகியவை கிடைக்க வேண்டும். கூட்டுறவிலும் விவசாயிகள் அமைப்புகளிலும் பெயரளவிலான பிரதிநிதித்துவம் போதாது; நிர்வாகத்திலும் முடிவெடுப்பதிலும் அவர்களுக்குச் சம அதிகாரம் வேண்டும்.

உழவர் – தொழிலாளர் ஐக்கியம்!

ஒரு கிராமத்தில் சாகுபடி நின்றுவிட்டால் நிலத்தைப் பயிரிடும் விவசாயிக்கு வருமானம் இல்லை; அதே வயலில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளிக்குக் கூலி வேலை இல்லை. ஏரிக்குத் தண்ணீர் வருவது, பயிரைக் காப்பாற்றுவது, கிராமத்தில் பள்ளியும் மருத்துவமனையும் செயல்படுவது ஆகியவற்றில் இருவருக்கும் பொதுவான நலன் இருக்கிறது. ஆனால் கூலி, வேலைநேரம், நில உரிமை போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கிடையே முரண்பாடுகளும் இருக்கின்றன. பொதுவான நலன்களைக் காட்டி இந்த முரண்பாடுகளை மூடிமறைக்க முடியாது.

விவசாயச் செலவு அதிகரிக்கிறது என்பதற்காக விவசாயத் தொழிலாளியின் கூலியைக் குறைப்பது தீர்வாகாது. விவசாயியின் செலவைக் குறைக்க விதை–உரம்–மருந்துகளின் அதிக விலை, இயந்திர வாடகை, இடைத்தரகு லாபம் ஆகியவற்றில்தான் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளிக்கு உரிய கூலி, பாதுகாப்பான வேலை, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு, நிலமற்றவர்களுக்கு நிலம் ஆகிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இரண்டு ஏக்கர் விவசாயியும் நூற்றுக்கணக்கான ஏக்கர் வைத்திருப்பவரும் ஒரே வர்க்கமல்ல. உழைக்கும் சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தங்கள் தனித்த உரிமைகளைக் கைவிடாமல், பொதுவான ஏகாதிபத்திய, கார்ப்பரேட் ஆதிக்கப் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம்தான் உறுதியான ஐக்கியத்தை உருவாக்க முடியும்.

வயலுக்கு வெளியேயும் உறிஞ்சப்படும் ரத்தம்!

விவசாயக் குடும்பத்தின் கடன் எல்லாமே விதைக்கும் உரத்துக்கும் வாங்கியதல்ல. ஒரு பருவத்தில் நல்ல விளைச்சலும் உரிய விலையும் கிடைத்த பிறகும் குடும்பத்தில் ஒருவருக்குப் பெரிய நோய் வந்தால் நகையை அடகு வைக்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகளின் படிப்புக்குக் கட்டணம் செலுத்தவும் கடன் வாங்க வேண்டியுள்ளது. வயலில் உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தனியார் மருத்துவமனையும் கல்வி வியாபாரமும் உறிஞ்சிக் குடித்தால், விளைபொருளுக்கு நல்ல விலை கிடைத்தாலும் அந்தக் குடும்பத்தின் கடன் நெருக்கடி தீராது.

எனவே, தரமான இலவசப் பொதுமருத்துவம், இலவசமான தரமான பொதுக்கல்வி, வலுவான பொதுவிநியோகம், முதியோர் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கைக்குத் தேவையானவை. இந்தப் பொதுச் சேவைகளுக்கான செலவை அரசு ஏற்க வேண்டும்.

விவசாயிக்கு நியாய விலை;
மக்களுக்கு மலிவு உணவு!

விவசாயிக்கு உரிய விலை கொடுத்தால் அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்கும் தொழிலாளர்களும் ஏழை மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று இருவரையும் எதிரிகளாக நிறுத்தும் முதலாளித்துவப் போக்கினை நாம் கவனிக்க முடிகிறது; அது ஒரு பச்சைப் பொய். விவசாயியிடமிருந்து முழு உற்பத்திச் செலவுக்கேற்ற விலையில் அரசு கொள்முதல் செய்து, பொதுவிநியோகத்தின் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்க முடியும். கொள்முதல் விலைக்கும் மக்களுக்கு வழங்கும் விலைக்கும் இடையிலான செலவைப் பொதுநிதியில் இருந்து ஈடுசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிக்கும் அதை வாங்கி உண்ணும் உழைக்கும் மக்களுக்கும் ஒரே நேரத்தில் பாதுகாப்பு கிடைக்கும்.

இளைய தலைமுறை விவசாயத்தைத் தொடர
என்ன செய்ய வேண்டும்
?

வயதான பெற்றோர் வயலில் வேலை செய்ய, அவர்களின் பிள்ளைகள் நகரத்தில் வேறு வேலை தேடிச் செல்வதைப் பார்த்து “இளைஞர்களுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை” என்று பலரும் கூறுகிறார்கள். தந்தை ஆண்டுதோறும் கடன் வாங்குவதையும், அறுவடைக்குப் பிறகு வட்டிக்குப் பணம் கொடுப்பதையும், தண்ணீருக்காக அலைவதையும் பார்த்து வளர்ந்தவர் அதே வாழ்க்கையைத் தொடர விரும்புவாரா?

நீர், கடன், உற்பத்தி வசதிகள், நியாயமான விலை, மருத்துவம், கல்வி ஆகியவற்றில் சமூகப் பாதுகாப்பு கிடைத்தால்தான் விவசாயம் அடுத்த தலைமுறைக்கும் வாழத்தகுந்த தொழிலாக இருக்கும். அவற்றை அரசுதான் உத்தரவாதம் செய்ய வேண்டும்.

முடிவெடுக்கும் அதிகாரம்:
ஆளும் வர்க்கத்திடமா
?
உழைக்கும் மக்களிடமா?

விவசாயி தனது வயலில் என்ன பயிரிடுவது என்று முடிவு செய்தாலும், அந்தப் பயிருக்கான தேவை என்ன, உரத்தின் விலை என்ன, விளைபொருளை எந்த விலையில் வாங்குவார்கள் என்பவற்றை அவர் தீர்மானிப்பதில்லை. பாசனத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை அரசும் அதிகார வர்க்கமும் முடிவு செய்கின்றன; இறக்குமதி–ஏற்றுமதிக்கான விதிகளை அரசு மாற்றுகிறது; விதை, பூச்சி மருந்து, கொள்முதல், விற்பனை ஆகியவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன; அவர்களுக்கு அரசின் முழு ஆதரவும் இருக்கிறது. அதாவது விவசாயம் சார்ந்த முடிவுகளை எடுப்பவர்கள் வேறு நபர்கள்; ஆனால், அதன் நட்டத்தைச் சுமப்பவர் விவசாயி. விவசாயக் கடன் மீண்டும் மீண்டும் உருவாவதற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான அரசியல் முரண்பாடு இதுதான்.

ஒரு அதிகாரியை மாற்றுவதாலோ இன்னொரு அமைச்சரை நியமிப்பதாலோ இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியுமா? விவசாய உற்பத்திக்குத் தேவையான நிலம், நீர், கடன், விதை, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றின் மீது, விவசாய விரோத ஆதிக்கச் சக்திகள் அதிகாரம் செலுத்தும் கட்டமைப்பை அடியோடு வீழ்த்த வேண்டும்.

கிராமத்தில் பாசன நீரைப் பகிர்வதிலிருந்து, பொதுநிதியில் கட்டப்படும் கிடங்குகளை நிர்வகிப்பது, கூட்டுறவின் வரவு–செலவுக் கணக்கைச் சரிபார்ப்பது, விலையை எப்படி நிர்ணயிப்பது, கிடைக்கும் உபரியை எப்படிப் பயன்படுத்துவது ஆகிய அனைத்து நிர்வாக முடிவுகளையும் கூட்டுறவுக் கமிட்டிகளின் உறுப்பினர்களே எடுக்க வேண்டும். அந்தச் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கே கண்காணிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். சிறு–குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள், கமிட்டிகளுக்கு முறையாகக் கணக்குக் கொடுக்க வேண்டும்; மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் பிரதிநிதிகளை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறும் உரிமை இருக்க வேண்டும். இந்த உரிமைகள் பெயரளவில் அல்ல, சட்டப்படி உறுதி செய்யப்பட்டு நடைமுறையில் செயல்பட வேண்டும். பொதுச் சொத்து என்றால் அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்து அல்ல; அது மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய சமூகச் சொத்து என்ற புரிதல் உருவாக வேண்டும். இங்கு வர்க்க அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் ஒடுக்கப்படும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய அதிகாரத்தை ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனிக் கூட்டுறவுகளை உருவாக்குவதால் மட்டும் முழுமையாகப் பெற முடியாது. கடன் கொள்கை, விலை நிர்ணயம், நிலப் பகிர்வு, உள்நாட்டு வர்த்தகம், அரசின் நிதி ஒதுக்கீடு ஆகிய முக்கிய முடிவுகளிலும் உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். அதற்குப் பெருமுதலாளிகள், பெருநிலவுடைமையாளர்களின் பொருளாதார–அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்து, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டும். ஆம், நாம் ஒரு புரட்சிக்காக அணிதிரள வேண்டும். புரட்சிகரமான முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றி, நமது மக்கள் கமிட்டிகளின் வழியே அதிகாரத்தை நாமே கட்டுப்படுத்த வேண்டும்.

தொகுத்துக் கூறினால், பழைய கடனைத் தள்ளுபடி செய்வது விவசாயியின் உடனடி நெருக்கடியைக் குறைக்கும். ஆனால் அடுத்த அறுவடைக்குப் பிறகும் கடன் நீடிக்கும் பொருளாதாரச் சூழல் மாறாவிட்டால், மீண்டும் மீண்டும் கடன் தள்ளுபடி போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருப்போம். ஆகவே கடன் தள்ளுபடிக்கான போராட்டத்தை உற்பத்திச் செலவு, விலை, நிலவுரிமை, பொதுச் சேவை ஆகியவற்றை மாற்றுவதற்கான போராட்டமாகவும், இந்த மாற்றங்களைத் தடுத்து நிறுத்தும் கார்ப்பரேட் – அதிகார வர்க்க ஆதிக்கத்தை ஒழித்து, உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டமாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். அத்தகைய போராட்டப்பாதையில் உழைப்பாளிகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! நம் காலத்திலேயே வென்று காட்டுவோம்!

(முற்றும்!)


தமிழ்ச்சுடர்

முந்தைய பகுதிகளைப் படிக்க: பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க