விவசாயக் கடன் தள்ளுபடி போராட்டம் – பகுதி 2
விவசாயக் கடனை ஒருமுறை தள்ளுபடி செய்வது உடனடி நிவாரணம் என்ற வகையில் நமக்கு உதவி செய்கிறது. அப்படிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், அடுத்தடுத்த பருவங்களில் பழைய கடனை விடப் பெரிய கடன் ஏன் மீண்டும் மீண்டும் உருவாகிறது? கடனை உருவாக்கும் இந்த முரண்பாட்டின் ஆணிவேர் விளைபொருளின் விலையில் இருக்கிறது.
விதை, உரம், பூச்சிக்கொல்லி முதல் கூலி, டிராக்டர் மற்றும் அறுவடை எந்திர வாடகை, டீசல், பாசனம் வரை சாகுபடிக்குத் தேவையான ஒவ்வொன்றுக்கும் சந்தையில் உள்ள விலையைத்தான் விவசாயி செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் பல மாதங்கள் உழைத்து உற்பத்தி செய்த தனது விளைபொருளுக்கு, “எனக்கு இவ்வளவு செலவாகிவிட்டது; இதற்குக் கீழே விற்க முடியாது” என்று விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை.
எல்லாச் செலவையும் உழைப்பையும் செலுத்தும் விவசாயிக்கு, தான் விளைவித்த பொருளின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை. இதுதான் விவசாய நெருக்கடியின் அடிப்படை முரண்பாடு.
விளைபொருளை விற்றுக் கிடைக்கும் தொகையை வைத்து உற்பத்திச் செலவையே ஈடுசெய்ய முடியவில்லை என்றால், அந்தப் பருவம் நட்டத்தில் முடிகிறது. ஆனால் விவசாயக் குடும்பத்தின் பிரச்சினை அத்துடன் முடிவதில்லை. குடும்பத்தின் உணவு, குழந்தைகளின் கல்வி, மருத்துவம், வீட்டுச் செலவு, பழைய கடன் தவணை ஆகியவற்றுக்கும் பணம் தேவை. சில மாதங்களில் அடுத்த சாகுபடிக்கு மீண்டும் விதை, உரம், கூலி, இயந்திரம் என முதலீடு செய்ய வேண்டும்.
முந்தைய அறுவடையின் வருமானத்திலிருந்து இந்தச் செலவுகளை ஈடுகட்ட முடியாதபோது, விவசாயி மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதனால்தான், விளைபொருளுக்குக் கிடைக்கும் குறைவான விலை என்பது வெறும் வாங்கல்–விற்றல் பிரச்சினை அல்ல; அதுவே அடுத்த பருவத்தின் கடனாக, குடும்பத்தின் சுமையாக மாறுகிறது.
எம்.எஸ்.பி: 50 சதவிகிதக் கூடுதல் விலை
எனும் ஏமாற்று!
விவசாயிகளுக்கு விலைப் பாதுகாப்பு அளிப்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிர்ணயிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு, தற்போது 22 பயிர்களுக்கு எம்.எஸ்.பி. நிர்ணயிக்கிறது. 2018-19 முதல் உற்பத்திச் செலவைவிட குறைந்தது 50 சதவிகிதம் கூடுதலாக எம்.எஸ்.பி-யை நிர்ணயிப்பதாகவும் அரசு கூறுகிறது. ஆனால் இங்கேதான் முக்கியமான கேள்வி எழுகிறது: எந்த உற்பத்திச் செலவின் மீது அந்த 50 சதவிகிதம் கணக்கிடப்படுகிறது?
விவசாயச் செலவைக் கணக்கிட அரசு பல வகையான கணக்குகளைப் பயன்படுத்துகிறது. விதை, உரம், கூலி, எரிபொருள், பாசனம் போன்றவற்றுக்கு விவசாயி நேரடியாகச் செலுத்தும் பணத்தை “A2” என்கிறார்கள். இதனுடன் குடும்பத்தினர் வயலில் செய்த உழைப்பின் மதிப்பையும் சேர்த்தால் அது “A2+FL”.
இதற்கும் மேலாக, சொந்த நிலத்தை வேறொருவருக்குக் குத்தகைக்கு விட்டிருந்தால் கிடைத்திருக்கக்கூடிய மதிப்பு, கிணறு, பம்பு, இயந்திரம் போன்ற நீண்டகால முதலீடுகளுக்கான வட்டிச் செலவு ஆகியவற்றையும் சேர்த்துக் கணக்கிடுவது “C2”. அதாவது விவசாயக் குடும்பம் செலுத்தும் பணம், குடும்ப உழைப்பு, நிலம், முதலீடு ஆகியவற்றை விரிவாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் கணக்கு இது.
தேசிய விவசாயிகள் ஆணையம், சராசரி உற்பத்திச் செலவைவிட எம்.எஸ்.பி. குறைந்தது 50 சதவிகிதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதே ஆணையம், முழுச் செலவான C2-ஐக்கூட மீட்டெடுக்க முடியாத பயிர்களை, விவசாயிகள் நீண்டகாலம் தொடர்ந்து பயிரிட முடியாது என்றும் சுட்டிக்காட்டியது. இதன் அடிப்படையில்தான் விவசாய அமைப்புகள் C2 செலவுக்கு மேல் 50 சதவிகிதம் (C2+50%) விலை வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
ஆனால் மத்திய அரசு “செலவுக்கு மேல் 50 சதவிகிதம் கொடுக்கிறோம்” என்று கூறும்போது, முழுச் செலவான C2-ஐ அடிப்படையாகக் கொள்வதில்லை. குடும்ப உழைப்பு வரை சேர்த்த A2+FL கணக்கின் மீதுதான் 50 சதவிகிதத்தைச் சேர்க்கிறது.
2025-26-இல் நெல்லுக்கான எம்.எஸ்.பி., A2+FL செலவின் சுமார் ஒன்றரை மடங்காக இருந்தபோதும், C2 முழுச் செலவுடன் ஒப்பிடும்போது சுமார் 1.1 மடங்காக மட்டுமே இருந்தது. எனவே அரசு “உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவிகிதம் தருகிறோம்” என்று சொன்னால், விவசாயிகள் கேட்க வேண்டிய முதல் கேள்வி: அது எந்தச் செலவின் அடிப்படையிலான 50 சதவீதம்?
எம்.எஸ்.பி. அறிவித்தால் மட்டும்
அந்த விலை கிடைக்குமா?
எம்.எஸ்.பி. அறிவிப்பது மட்டும் போதாது. அந்த விலைக்கு விவசாயியின் எல்லா விளைபொருட்களையும் கொள்முதல் செய்யவும் அரசு முன்வர வேண்டும். அப்படி வாங்குவதற்கான கொள்முதல் மையமும் போதுமான ஏற்பாடும் இல்லையென்றால், அரசு அறிவித்த எம்.எஸ்.பி. விவசாயியின் கைக்குப் பணமாக வந்து சேராது என்பதே எதார்த்த உண்மை.
நாடெங்கிலும் நெல், கோதுமை போன்ற பயிர்களை அரசு பெரிய அளவில் வாங்கும் கட்டமைப்பு ஓரளவு இருக்கிறது. அதேபோல பருப்பு, எண்ணெய்வித்து, கொப்பரைத் தேங்காய் போன்றவற்றுக்கும் தனித்தனிக் கொள்முதல் திட்டங்கள் உள்ளன. ஆனால், ஒரு பயிருக்கு எம்.எஸ்.பி. அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதாலேயே, அதை உற்பத்தி செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் அந்த விலை கிடைத்துவிடுவதில்லை.
2024-25-இல் நாட்டில் உற்பத்தியான கோதுமையில் சுமார் 23 சதவிகிதமும், அரிசியில் சுமார் 49 சதவிகிதமும் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்பட்டதாக அரசின் தரவுகள் பதிவு செய்கின்றன. அதாவது உற்பத்தியான அனைத்தையும் எம்.எஸ்.பி. விலையில் அரசு வாங்குவதில்லை.
அருகில் கொள்முதல் நிலையம் இல்லாமல் இருக்கலாம்; வாங்கும் அளவு அல்லது காலம் முடிந்திருக்கலாம்; ஈரப்பதம், தரம் போன்ற காரணங்களைக் கூறிப் பொருளை வாங்க மறுக்கலாம். அப்போது விவசாயி தனியார் மண்டிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். அதிக விளைச்சல் இருக்கும் காலங்களில், அங்கே விலை எம்.எஸ்.பி-க்கு கீழேதான் இருக்கிறது. இதனால், அரசு அறிவித்த விலைக்கும் விவசாயியின் கையில் கிடைக்கும் விலைக்கும் பெரிய வித்தியாசம் உருவாகிறது.
எனவே ஒரு பொருளுக்கு “எம்.எஸ்.பி. எவ்வளவு?” என்ற கேள்வியுடன் “அந்த விலைக்கு நமது பொருளை வாங்கப்போவது யார்?” என்ற கேள்வியும் சேரும்போதுதான் பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
தக்காளிக்கும் பூவுக்கும் தீர்வு என்ன?
நெல்லையோ கோதுமையையோ சில காலம் சேமித்து வைக்க முடியும். ஆனால் தக்காளி, கீரை, பழம், பூ போன்றவற்றை அப்படிச் செய்ய முடியாது. சில மணி நேரத்திலிருந்து சில நாட்கள் வரைதான் அவற்றின் ஆயுட்காலம். அதற்குள் விற்காவிட்டால் அவை அழுகிவிடும். எனவே சந்தை விலை எவ்வளவு குறைந்தாலும் உடனடியாக விற்க வேண்டிய கட்டாயம் விவசாயிக்கு ஏற்படுகிறது.
எளிதில் அழுகும் பொருட்களான தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பல பொருட்களுக்கு எம்.எஸ்.பி. கிடையாது. இவற்றின் விலை கடுமையாகச் சரிந்தால், அரசு சந்தையில் தலையிட்டு வாங்குவதற்கான ஒரு திட்டம் உள்ளது. இதைத்தான் சந்தைத் தலையீட்டுத் திட்டம் என்று அழைக்கிறார்கள்.
ஒரு பொருளின் விலை வழக்கமாக இருந்த அளவிலிருந்து கடுமையாகக் குறைந்தால், மாநில அரசு மத்திய அரசிடம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரலாம். அனுமதி கிடைத்தால் அரசு அந்தப் பொருளில் ஒரு பகுதியை நேரடியாக வாங்கலாம். அல்லது அரசு நிர்ணயிக்கும் விலைக்கும் விவசாயி சந்தையில் விற்ற விலைக்கும் உள்ள வேறுபாட்டை அவருக்கு வழங்கலாம். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை விலை அதிகமாக இருக்கும் பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் சேமிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவையும் அரசு ஏற்கலாம்.
ஆனால் விலை சரிந்தவுடன் இந்த உதவி தானாக விவசாயியின் கைக்கு வந்துவிடாது. மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும்; மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதன் பிறகுதான் கொள்முதல் அல்லது விலை வித்தியாசத்தை வழங்கும் நடவடிக்கை தொடங்கும்.
அதுவரை தக்காளி, பூ, காய்கறிகள் காத்திருக்காது. வேறுவழிவின்றி விவசாயிகள் அவற்றை கிடைத்த விலைக்கு சந்தையில் விற்றுவிடுகின்றனர்.
எனவே அழுகக்கூடிய பயிர்களுக்கான விலைப் பாதுகாப்பு என்பது அரசுக் கொள்முதல், குளிர்சாதன வசதி, சேமிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் ஆகியவற்றோடு சேர்ந்திருக்க வேண்டும்.
“எல்லோரும் ஒரே பயிரை விளைவித்தார்கள்” –
குற்றம் விவசாயிகளுடையதா?
ஓர் ஆண்டில் தக்காளிக்கோ வெங்காயத்துக்கோ நல்ல விலை கிடைக்கிறது. அதைப் பார்த்து அடுத்த ஆண்டு அதிகமான விவசாயிகள் அதே பயிரைச் விளைவிக்கிறார்கள். உற்பத்தி அதிகரித்ததும் விலை சரிகிறது. உடனே, “எல்லோரும் ஒரே பயிரைப் போட்டுவிட்டார்கள்; சந்தையைப் புரிந்துகொள்ளாமல் பயிரிட்டார்கள்” என்று விவசாயிகளையே குற்றம் சொல்கிறார்கள்.
ஆனால் விவசாயிகள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
எந்தப் பயிரைச் செய்தாலும் செலவு போகக் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், போன ஆண்டு அதிக விலை கிடைத்த ஒரே பயிரை எல்லோரும் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், எதார்த்தத்தில் அந்த நம்பிக்கையே இல்லை.
ஏற்கெனவே கடனில் இருக்கும் விவசாயிக்கு இது இன்னும் முக்கியமானது. கடந்த ஆண்டு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது என்றால், “இந்த முறையாவது கடனை அடைக்க முடியுமா” என்ற நம்பிக்கையில்தான் அவர் தக்காளி பயிரிடுகிறார். பலரும் அதே முடிவை எடுத்தால் உற்பத்தி அதிகரித்து விலை சரிகிறது. அந்த விவசாயிகளிடம் “ஏன் எல்லோரும் ஒரே பயிரைப் போட்டீர்கள்?” என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
விலை சரிந்த பிறகு விவசாயியைக் குற்றம் சொல்லும் அரசு, முதலில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்: எந்தப் பயிரை விளைவித்தாலும், செலவு போக வாழக்கூடிய விலை கிடைக்கும் நிலையை ஏன் உருவாக்கவில்லை?
எந்தப் பயிரை விளைவிப்பது எனத் தேர்வு செய்வதை முந்தைய ஆண்டின் விலை மட்டும் தீர்மானிப்பதில்லை. தண்ணீர், விதை, வங்கிக் கடன், மண், அருகிலுள்ள சந்தை, அரசுக் கொள்முதல் ஆகியவையும் அதில் பங்கு வகிக்கின்றன. விவசாயி வேறு பயிருக்கு மாற வேண்டுமென்றால் அதற்கான இந்த வசதிகளும் இருக்க வேண்டும்.
ஆக, “எல்லோரும் ஒரே பயிரைப் போட்டார்கள்” என்பது காரணமல்ல; நிலையான, இலாபகரமான விலை கிடைக்காததன் விளைவுதான் அது.
அறுவடை நேரத்தில்
விலையை மாற்றும் அரசு
விளைபொருளின் விலை, எவ்வளவு உற்பத்தியாகிறது என்பதாலேயே மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அரசின் ஏற்றுமதி, இறக்குமதி முடிவுகளும் விலையை உயர்த்தவும் குறைக்கவும் செய்கின்றன.
2024-இல் வெங்காயத்தில் இதைப் பார்த்தோம். மார்ச் 22 அன்று மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்தது. மே 4 அன்று ஒரு டன்னுக்கு 550 டாலருக்குக் கீழே ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற நிபந்தனையையும் 40 சதவிகித ஏற்றுமதி வரியையும் விதித்து மீண்டும் ஏற்றுமதியை அனுமதித்தது. செப்டம்பர் 13 அன்று அந்தக் குறைந்தபட்ச விலையை நீக்கி, ஏற்றுமதி வரியை 20 சதவிகிதமாகக் குறைத்தது.
விவசாயி எந்தப் பயிரைச் செய்ய வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விதைக்கிறார். ஆனால் அறுவடை வரும் நேரத்தில் அரசின் ஏற்றுமதி–இறக்குமதி கொள்கை மாறினால், அது சந்தையில் கிடைக்கும் விலையையும் மாற்றுகிறது. அந்த மாற்றத்தை விவசாயி விதைக்கும்போதே முன்கூட்டியே கணிக்க முடியாது.
உள்நாட்டில் வெங்காயம் போதுமான அளவு கிடைக்கவும், நுகர்வோர் விலை அதிகரிக்காமல் இருக்கவும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கான சுமையை விவசாயியின் தலையில் ஏற்றுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
விவசாயி குறைந்த விலையில், அதாவது நட்டத்துக்கு விற்றால்தான் நகரத்தில் பொருள் மலிவாகக் கிடைக்கும் என்ற பொய் பிம்பத்தை தகர்க்க வேண்டும். அரசு விவசாயியிடமிருந்து உரிய விலையில் வாங்க வேண்டும்; ரேஷன் உள்ளிட்ட பொது விநியோக அமைப்புகள் மற்றும் மானியங்களின் மூலம், உழைக்கும் மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். விவசாயிக்கு உரிய விலையும், உழைக்கும் மக்களுக்குக் கட்டுப்படியாகும் உணவு விலையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இரண்டையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
தொகுத்துக் கூறினால், விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து வாழ விரும்புவதில்லை. அவர்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு, உற்பத்திச் செலவையும் குடும்ப வாழ்க்கையையும் சமாளிக்கும் விலை வேண்டும். பழைய கடனைத் தள்ளுபடி செய்வது உடனடி நிவாரணம்; புதிய கடன் உருவாகாமல் இருக்க விவசாயம் செய்து வாழக்கூடிய வருமானம் வேண்டும்; அதற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
ஆனால், சந்தையில் ஒரு பொருள் அதிக விலையில் விற்பதாலேயே, அதன் பலன் முழுவதும் விவசாயியின் கைக்குச் சென்றுவிடுகிறதா? வெளியூரிலிருந்து வாங்க வரும் வியாபாரியிடம் விவசாயி நேரடியாக விலை பேச முடியுமா? அல்லது இருவருக்கும் நடுவில் வேறு யாராவது நின்று, யாரிடம் விற்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்களா?
இதுதான் அடுத்த கட்டுரையின் கேள்வி…
(தொடரும்..)
![]()
தமிழ்ச்சுடர்
கட்டுரையின் மற்ற பகுதிகளைப் படிக்க: பகுதி 1, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6, பகுதி 7
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











