10.09.2026

தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் –
தேசிய கல்விக் கொள்கை திணிப்பு மற்றும்
த.வெ.க அரசின் மாணவர் விரோத நடவடிக்கையின் உச்சம்!

கண்டன அறிக்கை

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், கடந்த செப்டம்பர் 8 அன்று “தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவு – 2026 மசோதா” நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள சட்டமானது தனியாா் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு 100 ஏக்கருக்கு குறையாத நிலமும், பல்கலைக்கழகத்தை நிறுவும் அமைப்பிடம் குறைந்தது ரூ.50 கோடி அறக்கட்டளை நிதியும் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது. இந்த வரையறையை நேற்றைய சட்டத்திருத்தம் மாற்றியமைக்கிறது.

தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு  சென்னை மாநகராட்சிப் பகுதியில் 12 ஏக்கா் நிலமும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில்  18 ஏக்கா் நிலமும், பிற பகுதிகளில்  25 ஏக்கா் நிலமும் இருந்தால் போதுமானது என்றும், நிலையான அறக்கட்டளை நிதி ரூ.25 கோடியை மட்டும் பராமரித்தால் போதும் என்றும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்தச் சட்டத்திருத்தமானது தனியார் பல்கலைக்கழகத்திற்கான நிலத்திற்கான அளவில் ஏறக்குறைய 10 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது; அறக்கட்டளை நிதியையும் சரி பாதியாகக் குறைத்துள்ளது.

முன்னதாக, மத்திய அரசு அமைத்த ஒழுங்குமுறை சீர்திருத்த பணிக்குழுவானது தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலத் தேவையை நீக்குவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான குறைந்தபட்ச அறக்கட்டளை நிதித்தேவையை திருத்தம் செய்வதற்குமான பரிந்துரையை வழங்கியது.

இதனையடுத்து, கடந்த தி.மு.க. ஆட்சியில் இதற்கான சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டது. ஆனால், கல்வியாளர்கள் – மாணவர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதனைத் திரும்பப்பெற்றது. இந்நிலையில், த.வெ.க. அரசானது தற்போது அவசர அவசரமாக இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

ஏனென்றால் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், 15 நாட்கள் கழித்து சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இப்படியொரு சட்டத்திருத்தத்தை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது.


படிக்க: தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தம்: விவசாயத்தை அழிக்கும் விஜய் அரசு!


‎

இத்திருத்தமானது ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் 2018-ஆம் ஆண்டு சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட சிவநாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது, தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்க பாதை அமைத்து தரும் நடவடிக்கையாகும். மேலும், உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்க வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கையை நேரடியாகத் திணிக்கும் நடவடிக்கையும் ஆகும்.

ஒருபுறம், மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி முடக்கத்தாலும் துணைவேந்தர்களும் நிரந்தர ஆசிரியர்களும் நியமிக்கப்படாததாலும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. மறுபுறத்தில், உயர்கல்வியை தனியார் – கார்ப்பரேட்மயமாக்குகின்ற நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன.

அத்தகைய இச்சட்டத்திருத்தமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல்களை போல பெருகும். தரமற்றதாகவும் அப்பட்டமான கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் உருவாக்கப்படும் இப்பல்கலைக்கழகங்களால் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் நாசமாகும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை போன்று, கலை – அறிவியல் படிப்புகளுக்கு கியூட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயமும் இம்மசோதாவின் பின்னணியில் உள்ளது. ஏனென்றால், தனியார் பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்தால் மாணவர் சேர்க்கைக்கு கியூட் தேர்வை கட்டாயப்படுத்திக் கொள்ளும் அதிகாரம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களிலும் கியூட் தேர்வு நடைமுறையில் உள்ளது.

ஆகவே, இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் நீட் பயிற்சி மையங்களைப் போன்று, கியூட் பயிற்சி மையங்கள் தமிழ்நாடு முழுவதும் முளைக்கும். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான இடங்கள் இலட்சக்கணக்கில் பேரம் பேசி விற்கப்படும் நிலை உருவாகும். மருத்துவத்தைப் போன்று கலை – அறிவியல் உள்ளிட்ட படிப்புகளையும் பணக்கார, மேட்டுக்குடி வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்படும்.

மேலும், இம்மசோதாவினால் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படும். ஏனென்றால், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் உள்ளது. எனவே, சமூக நலன் சார்ந்த, அறிவியல் பூர்வமான, பகுத்தறிவை வளர்த்தெடுக்கக் கூடிய பல முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகள் கைவிடப்பட்டு இலாப நோக்கம் வாய்ந்த படிப்புகளே கற்பிக்கப்படும்.

த.வெ.க. அரசின் இந்த மாணவர் விரோத நடவடிக்கையை புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதுடன் இம்மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

மேலும், இம்மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவர் இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் பேராசிரியர்களும் இணைந்து வலுவான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.


தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க